
வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் வாரிசு. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமான ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25 நாட்களை கடந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சரத்குமார், விடிவி கணேஷ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஞ்சிதமே பாடலுக்கு விஜய் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், வாரிசு படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என்று முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் லியோ என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாட்களை குறி வைத்து வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.