இசைஞானி இளையராஜா:-
உலகளவில் தமிழகத்தின் இசையை பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர் தான் ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். இவர் 1976இல் தமிழ்த் திரையுலகில் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாக தனது கலைப் பயணத்தை ஆரம்பித்து இதுவரையில் 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது வாழ்க்கையையுமே அற்பணித்தவர்கள். மேற்கத்தியப் பாரம்பரிய இசையை இந்தியத் திரைப்படங்களில் உள்ளடக்கி தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், ‘பத்ம பூஷன் விருது, அதாவது இந்திய அரசின் ‘தேசிய விருதை’, நான்கு முறையும் ‘பிலிம்ஃபேர் விருதை, மூன்று முறையும் , நந்தி விருது அதாவது கேரள அரசின் விருதை நான்கையும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருதை ஆறு முறையும் ‘சங்கீத் நாடக அகாடெமி விருது, ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, என பல்வேறு விருதுகளைப் பெற்று, தமிழ் நெஞ்சங்களில் இசையால் உதிரத்தில் கலந்து, இன்று வரை நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் இவரின் முயற்சியில் “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை மற்றும் திரைத்துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி கீழே பார்ப்போம்.
இளையராஜாவின் பிறப்பு:-
1943 ஆம் ஆண்டில், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக ஜூன் மாதம் 2 ஆம் தேதி இளையராஜா பிறந்தார். இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன் என்பதாகும். இவருக்கு டேனியல் பாஸ்கர், பாவலர் வரதராஜன், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், பத்மாவதி , கமலாம்மாள் என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். இவரின் சகோதரரான அமர் சிங் என்ற கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:-
இவர் பாடசாலையில் டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டார். இதனையடுத்து சிலகாலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், இவரை அனைவரும் ராசய்யா என்று அழைத்தனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம், ஆர்வத்தினால் தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் ஆரம்பித்தார். ஹார்மோனியம், கிட்டார், பியானோ போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்றார், இதனையடுத்து இவர் தன் பெயரை ‘ராஜா’ என்று மாற்றினார். பாடசாலை படிப்பை வீட்டின் வறுமை காரணமாக பாதியிலே நிறுத்திக்கொண்டார். இவர் தனது 14வது வயதிலேயே நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு 19வது வயதில், 1961 ஆம் ஆண்டில் நாடகக்குழுவில் தனது சகோதரர்களுடன சேர்ந்து, இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், கச்சேரிகளிலும் கலந்து கொண்டார். பின்னர், தொடர்ந்து இவர் Great Britain உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார்.
இசைஞானியின் இசையுலகப் பிரவேசம்:-
இசைஞானி நாடகங்களிலும், இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வந்த அவர், 1970ம் ஆண்டு பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். கன்னட இசையமைப்பாளரான ஜி. கே.வெங்கடேஷன் உதவியாளராக சேர்ந்து, இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இதனிடையே இவர் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் சுயமாகப் பாடல்கள் எழுதி, தான் இருந்த இசைக்குழுவில் உள்ள சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசையமைக்குமாறு கேட்டுக் கொள்வார். அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தந்தையான ஆர்.கே.சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைப்பார்.
திரையுலக வாழ்க்கை:-
1975ல் பஞ்சு அருணாச்சலம் தனது ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். இத்திரைப்படத்தில், அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?’ என்ற பாடல் மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி அவர் உருவாக்கியதால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து ‘ஆறிலிருந்து அறுபது வரை, ‘24 மணி நேரம்’, ‘கடலோர கவிதைகள்’, ‘16 வயதினிலே’, ‘100வது நாள்’, ‘ஆனந்த்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘ஆண்டான் அடிமை’, ‘ஆணழகன்’, ‘ஆராதணை’,‘ஆத்மா’, ‘ஆவாரம்பூ’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஆபூர்வ சகோதர்கள்’, ‘அடுத்த வாரிசு’, ‘மூன்றாம் பிறை’, ‘இதயத்தை திருடாதே’, ‘மௌன ராகம்’, ‘முதல் மரியாதை’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முள்ளும் மலரும்’, ‘முந்தானை முடிச்சு’, ‘சின்ன தம்பி’, ‘அமைதிப்படை’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘நாயகன்’, ‘அன்புள்ள ரஜனிகாந்த்’, ‘பத்ரக்காளி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சின்னவர்’, ‘தர்ம துரை’, ‘பாயும் புலி’, ‘பணக்காரன்’, , ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘எஜமான்’, ‘குணா’, ‘இன்று போய் நாளை வா’, ‘காக்கி சட்டை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கைராசிக்காரன்’, ‘கலைஞன்’ ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, எனப் பல நூற்றுக்கணக்கானப் படங்களுக்கு இசையமைத்துப் புகழின் உச்சிக்கே சென்றார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமன்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என 950 க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்குப் பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.
இளையராஜாவின் Symphony:-
இளையராஜா ரோயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில், ‘symphony’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். ஆனால், அவர் இசையமைத்த சிம்பொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை எனினும் இவரை தமிழ் திரைப்படக் கலைஞர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கின்றனர்.
இளையராஜாவின் Live Concert:-
இளையராஜா எப்போதும் தனது இசையை நேரலையில் நிகழ்த்துவதில்லை. அவர் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்து அவரது முதல் பெரிய நேரடி நிகழ்ச்சி 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது இந்த இசை நிகழ்ச்சி நான்கு மணி நேரம் வரை நடைபெற்றது.
இளையராஜா கனடாவின் டொராண்டோவில் உள்ள ரோஜர்ஸ் மையத்தில் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று வட அமெரிக்காவில் தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவரும் அவரது குழுவும் 2016 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். அக்டோபர் 2017ஆம் ஆண்டில், முதன்முறையாக ஹைதராபாத்திலும், நவம்பரில் மலேசியாவின் கோலாலம்பூரிலும் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார். மார்ச் 2018 ஆம் ஆண்டில் ஹஸ்டன், டல்லாஸ், சிகாகோ, கனெக்டிகட், சான் ஜோஸ், வோஷிங்டன் டி.சி மற்றும் டொராண்டோவில் மீண்டும் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார்.
இளையராஜா 11 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையில் முதல்முறையாக, ஹில்சாங் கன்வென்ஷன் சென்டரில் தனது இசைக்குழுவுடன் சிட்னியில் நிகழ்த்தியுள்ளார். இசைஞானி இளையராஜா முதன்முறையாக, 2019 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். இளையராஜாவுடன், பாடகர்கள், மனோ, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உஷா உதூப், மது பாலகிருஷ்ணன், ஹரிசரண், மற்றும் பவதாரினி ஆகியோரும் ஹங்கேரியிலிருந்து ஒரு இசைக்குழுவின் ஆதரவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர். கச்சேரியிலிருந்து கிடைத்த வருமானம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்தாளர் இளையராஜா:-
இவரின் பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்தாலும் இளையராஜா இந்துமதத்தின் மீது மிகவும் விருப்பமுள்ளவராகவும் , ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வந்து வந்தார். இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘சங்கீதக் கனவுகள்’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’ ,‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘நாத வெளியினிலே’, ‘என் நரம்பு வீணை’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
இல்லற வாழ்க்கை:-
இவர் தனது வாழ்க்கைத்துணையாக ஜீவா என்பவரை கரம்பற்றினார். இவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரணி என்ற மகளும் பிறந்தனர். இவர்களும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றமை யாமறிந்ததே.
இளையராஜாவின் விருதுகள்:-
- 1988 ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்தது.
- 1988 ஆம் ஆண்டு இவருக்கு மத்திய பிரதேச அரசின் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்பட்டது. இசையில் அவர் புரிந்த சாதனைக்காக ‘முனைவர் பட்டம்’ வழங்கி 1994ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு வழங்கி கௌரவித்தது.
- தேசிய விருது 1984ஆம் ஆண்டில் ‘சாகர சங்கமம்’ என்ற படத்திற்காகவும், ‘சிந்து பைரவி’ என்ற திரைப்படத்திற்காகவும் பெற்றார்.
- 1986ஆம் ஆண்டில் ‘ருத்ர வீணா’ என்ற திரைப்படத்திற்காகவும்.
- 1989ஆம் ஆண்டிலும் ‘பழசி ராஜா’ என்ற படத்திற்காக 2009ஆம் ஆண்டிலும் பெற்றார்.
- 1989 ஆம் ஆண்டில் அவரது சிறந்த பங்களிப்பிற்காகவும்.
- 1990ஆம் ஆண்டில் ‘போபிலி ராஜா’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும்,
- 2003 ஆம் ஆண்டில் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும்.
- 2005ஆம் ஆண்டில் அச்சுவிண்டே அம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் பிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றார்.
தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள்
- 1977 ஆம் ஆண்டு ‘16 வயதினிலே’ படத்திற்காகவும்.
- 1980 ஆம் ஆண்டு ‘நிழல்கள்’ படத்திற்காகவும்.
- 1981 ஆம் ஆண்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1988 ஆம் ஆண்டு ‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காகவும்.
- 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ மற்றும் ‘கரகாட்டக்காரன்’ படங்களுக்காகவும்.
- 2009 ஆம் ஆண்டு ‘அஜந்தா’ படத்திற்காகவும் வென்றார்.
- 1994ஆம் ஆண்டில ‘சம்மோஹனம்’ என்ற படத்திற்காக கேரள மாநிலத் திரைப்பட விருதுகளையும்.
- 1995ஆம் ஆணடில் ‘கலபாணி’ படத்திற்காகவும்,
- 1998 ஆம் ஆண்டில் ‘கள்ளு கொண்டொரு பெண்ணு’ என்ற படத்திற்காகவும் பெற்றார்.
தரவரிசை 100 ஆண்டு இந்திய சினிமாவைக் கொண்டாடும் சிஎன்என்-ஐபிஎன் நடத்திய கருத்துக் கணிப்பில், 2013 ஆம் ஆண்டில் இளையராஜா இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட-இசை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அமெரிக்க உலக சினிமா போர்டல் “டேஸ்ட் ஆஃப் சினிமா” சினிமா வரலாற்றில் 25 சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்தது இந்த பட்டியலில் இருந்த ஒரே ஒரு இந்தியரான இளையராஜா தான். பிபிசி 2003 ஆம் ஆண்டில், நடத்திய ஒரு சர்வதேச இந்தக் கணக்கெடுப்பில் 165 நாடுகளில் இருந்து அரை மில்லியன் மக்கள் பங்கெடுத்த நிகழ்வில் இவரது இசையமைப்பில் வெளிவந்த தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற “அடி ராக்கம்மா கையத்தட்டு” பாடல் எல்லா காலத்துப் பாடல்களிலும் முதல் பத்து இடத்தில் மிகவும் பிரபலமான நான்காவது பாடலாக தேர்வானது.
அன்று தொட்டு இன்று வரை இசையிலே தனக்கென ஒரு முத்திரை பதித்து இன்னும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை இசைஞானி இளையராஜா தக்கவைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
அன்றும் இன்றும் என்றும் இசைஞானியின் மயக்கத்தில் நாங்கள்