thalapathy-vijay-leo-audio-launch-cancelled-trending

தளபதி விஜய் வாழ்க்கையின் குட்டி கதை

தளபதி விஜய்:-

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் விஜயும் ஒருவர். இவர் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி எஸ். ஏ. சந்திரசேகரருக்கும் ஷோபாக்கும் மகனாக பிறந்தார். ஆரம்பத்தில் தனது தந்தையின் இயக்கத்திலேயே இவர் நடித்துவந்தார் . இவரின் நடிப்பில் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தான் தனக்கான இடத்தை இவர் தக்க வைத்துள்ளார் எனலாம். தற்போது தமிழ் சினிமாவின் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். “தளபதி” என விஜயின் ரசிகர்கள் அவரை அழைக்கிறார்கள். இவருக்கு இந்தியாவில் மட்டுமன்றி சீனா, யுனைடெட் கிங்டம், ஜப்பான, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.

தளபதி விஜயின் ஆரம்பக் கட்ட வாழ்க்கை:-

விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் முன்னணி தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா பின்னணிப் பாடகி மற்றும் கர்நாடகப் பாடகி ஆவார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். விஜய் கிறிஸ்துவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். வித்யா தனது இரண்டாவது வயதில் இறந்து விட்டார். இந்த இறப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கருத்துப்படி விஜய் ஒரு வயது குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் சுட்டித்தனமாகவும் இருந்துள்ளார். தங்கையை இழந்தபின் இவர் அமைதியாகி விட்டார். 2005 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த சுக்ரன் திரைப்படத்தில் இவரது தங்கை வித்யாவின் கதை சொல்லப்பட்டிருக்கும். இத்திரைப்படத்தில் விஜய் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விஜய் தன் சிறுவயதில் முழுவதையும் சென்னையில் கழித்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது கல்வியை ஆரம்பித்தார். தொடர்ந்து விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார். இவர் லயோலா கல்லூரியில காட்சித் தொடர்பியல் (விஷ்வல் கம்யூனிகேசன்சில் ) பட்டம் பெற்றார். நடிப்பில் இருந்த ஆர்வத்தால் தனது கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சினிமாவிற்குள் பிரவேசித்தார்.

தளபதி விஜயின் திருமணம்:-

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி யுனைடெட் கிங்டம்இல் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை விஜய் மணந்தார். இவர்களது திருமணம் இந்து, கிறித்தவ முறைப்படி இடம்பெற்றது. இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் ஜேசன் சஞ்சய் என்ற மகனும், 2005ல் திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தனர். தனது தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா இளமைக் காலத்திற்கு முந்தைய வயதுடைய மகளாக 2016இல் வெளியாகி பட்டையைக் கிளப்பிய தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தளபதி விஜயின் திரையுலக அறிமுகம்:-

1984ஆம் ஆண்டு விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவரது தந்தை இயக்கத்தில் 1988ஆம் ஆண்டில் வெளியான இது எங்கள் நீதி திரைப்படம் வரை குழந்தை நடிகராக தொடர்ந்து நடித்தார். இதனைத்தொடர்ந்து தனது 18வது வயதில் 1992ஆம் ஆண்டில் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக முதன்முறையாக நடித்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை விஜய் கதாநாயகனாக 66 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 இந்தியா டுடே விருது, 1 காஸ்மோபாலிடன் விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தளபதி விஜய் பாடகராக மாறிய தருணம்:-

விஜய் நடிகராக மடடுமன்றி பாடகராவும் அவதாரமெடுத்தவர் என்பது யாம் அனைவரும் அறிந்ததே. 1994ஆம் ஆண்டில் ஒரு பம்பாய் சிட்டி முதல், பாப்பா பாப்பா என ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். நடிகன் , பாடகன் என்பதையும் தாண்டி இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர் ஆவார். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழர் ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தார்:-

விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக விக்ரமன் இயக்கிய பூவே உனக்காகவே திரைப்படம் அமைந்தது. இது அவரது முதல் வெற்றிகரமான படமாக அமைந்தது. இவ்வெற்றியினை தொடர்ந்து இவர் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டார். இவரின் பத்தாவது படம் வசந்த வாசல் ஆகும். இதனையடுத்து இவர் செல்வா மற்றும் மாண்புமிகு மாணவன் ஆகிய சண்டைப் படங்களிலும், காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற காதல் படத்திலும் நடித்தார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ் மோர், லவ் டுடே; ஆகிய படங்களில் விஜய் நடித்தார். ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சிம்ரனுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இதன்பின்னர் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய் , பிரியமுடன், மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதனையடுத்து 1999 ஆம் ஆண்டில் சிம்ரனுடன் இணைந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படதிற்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறந்த திரைப்படத்திற்காக கிடைத்தது. இதன் பின்னர் விஜய் நெஞ்சினிலே, என்றென்றும் காதல் மற்றும் மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.

2000 ஆண்டின் ஆரம்பம் முதலே இவரது நடிப்பில் சிறு மாற்றமாக இவர் பொழுதுபோக்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனடிப்படையில் கண்ணுக்குள் நிலவு, பிரியமானவளே, குஷி ஆகிய படங்களில் நடித்தார். இயக்குனர் சித்திக்கின் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டில் ப்ரன்ஸ் படத்தில் விஜய் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இதை தொடர்ந்து தளபதி விஜய் பத்ரி மற்றும் ஷாஜஹான் படங்களில் நடித்தார். பத்ரி தெலுங்குப் படமான தம்முடுவின் தமிழ் ரீமேக் ஆகும். முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா 2002 இல், விஜய்யுடன் இணைந்து தமிழன் படத்தில் நடித்தார். இப்படத்தில் தான் பிரியங்கா சோப்ரா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பகவதி , யூத் ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை புதிய கீதை, வசீகரா ஆகிய படங்களுடன் ஆரம்பித்தார்.

தளபதி விஜயின் தொடர் வெற்றி படங்கள்:-

2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து விஜய் திருமலை என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனரான ரமணாவால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் இவர் மிக வித்தியாசமாக நடித்திருப்பார். இவரின் திரையுலக வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 2002 இல் உதயா படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தாமதமாகி, 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்பட்டது. 2004ஆம் ஆண்டு தெலுங்கு படமான ஒக்கடுவின் மறு ஆக்கமான கில்லி 2004 இல் வெளியானது. இத்திரைப்படம் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடியது. எஸ். தரணி இயக்கிய இப்படத்தை ஏ. எம். ரத்னம் தயாரித்தார். இவருடன் த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்தனர். இவரின் திரைப்படங்களில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும்.

தொடர்ந்து மதுர திரைப்படத்தில் நடித்தார். இவர் பேரரசு இயக்கிய திருப்பாச்சியில் 2005 ஆம் ஆண்டில் நடித்தார். இதனையடுத்து ஜோன் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசாவுடன் இணைந்து மிகவும் கலக்கலாக நடித்தார். பின்னர் மீண்டும் பேரரசின் இயக்கத்தில் சிவகாசி படத்தில் அசினுடன் இணைந்து நடித்தார். 2006ஆம் ஆண்டில் ஆதி இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து ரமணா இயக்கத்தில் வெளியானது. 2007 ஆம் ஆண்டில் அசினுடன் இணைந்து நடித்த விஜய் போக்கிரி ஆண்டின் ஆரம்பத்தில் வெளியானது. இத்திரைப்படமான தெலுங்கு போக்கிரியின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தை நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கினார். இது விஜயின் 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மிக அதிகமான வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜயின் நடிப்பு விமர்சகர்களால் நன்றாகப் பாராட்டப்பட்டது.

தளபதி விஜயின் வசூல் சாதனை படைத்த படங்கள்:-

பரதன் இயக்கிய அழகிய தமிழ்மகன் படத்தில் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் நடித்தார். இதில் இவர் இரட்டை வேடங்கள் ஏற்று வில்லன் மற்றும் கதாநாயகன் என இரண்டு பாத்திரங்களில் நடித்தார். இந்த படம் மிதமான வசூல் செய்தது. இதனைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு விஜய் டி.வி. விருது வழங்கும் விழாவில் அநேக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் விஜய் கௌரவிக்கப்பட்டார். மீண்டும் தரணியின் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு குருவி படத்தில் நடித்தார். பிரபுதேவாவின் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு, வில்லு படத்தில் நடித்தார். அடுத்து இவர் ஏ.வி.எம். தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டில் அதிகமாக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 ஆம் ஆண்டு, இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார்.

2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இயக்குனர் சித்திக்குடன் இணைந்து மீண்டும் காவலன் படத்தில் நடித்தார். இது மலையாள திரைப்படமான பாடிகார்ட்டை தமிழில் ரீமேக் செய்த திரைப்படமாகும். இத்திரைப்படம் அனைத்து மட்டங்களிலுமிருந்தும் மற்றும் பார்வையாளர்களிடமிருந்தும் , விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான பாராட்டினை பெற்றதோடு மட்டுமன்றி நல்ல வசூலையும் பெற்றது. காவலன் சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலதிரையிடப்பட்டது. இந்த ஆண்டின் தீபாவளியின் போது, எம்.ராஜா இயக்கிய வேலாயுதம் வெளியானது. இத்தரைப்படமும் 2011 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனையடுத்து 3 இடியட்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய் நடித்தார். இதில் அமீர்கான் இந்தியில் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார். இப்படத்தை எஸ்.ஷங்கர் இயக்கினார். 2012ஆம் ஆண்டு பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படமும் வசூலில் பெரிய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் நண்பன் திரையிடப்பட்டது. படத்தில் விஜயின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டினர். நண்பன் 100 நாட்கள் ஓடியது. பின்னர் 2012 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கிய இந்தித் திரைப்படமான அக்ஷய் குமார் நடித்த ரவுடி ரத்தோர் இல் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.

தளபதி விஜய் தெலுங்கு அங்கீகாரம் மற்றும் வெற்றி:-

தெலுங்கில் நடிகர் விஜயின் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்ட்டு அவைகளில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன. உதாரணமாக துப்பாக்கி, ஸ்னேஹிதுடு, ஜில்லா, போலிசோடு, அதிரிந்தி, ஏஜெண்ட் பைரவா ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். தெலுங்கு திரையுலகிற்கு நடிகர் சிரஞ்சீவி திரும்பிவந்து படம் ஒன்றில் நடிக்க விரும்பினார். அவருக்கு தனது திரைப்படமான கத்தி திரைப்படத்தின் ரீமேக் உரிமைகளைப் பெற விஜய் உதவினார். இதனையடுத்து இத்திரைப்படத்தை கைதி நம்பர் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்தார். இந்த ரீமேக்கின பின் சிரஞ்சீவி விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

தளபதி விஜயின் சமூக நலன்:-

நடிகர் விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் அனைத்து வகையான மக்களிற்கும் ஏராளமான சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது, 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அன்று புதுக்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம் தான் பொறுப்பாக உள்ளது.

இச்சமூக நல அமைப்பின் மூலம் ஏழைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவைகளை செய்து வருகிறார். இவரின் இச்சேவைகள் மற்றும் திரைத்துறையில் இவர் புரிந்த சாதனைகள் ஆகியவற்றிற்காக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

தளபதி விஜயின் அரசியல்:-

விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் 2009ம் ஆண்டு ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் இவ்வமைப்பு அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆம் ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்

தளபதி விஜயின் லியோ:-

விஜய் நடிப்பில் அவரது 67ஆவது படமான லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிப்பில், வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் விஜய்யுடன் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார். இத்திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் படக்குழுவின் திடீர் திடீர் அப்டேகளால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தவண்ணமுள்ளது.

லியோ அப்டேட்:-

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோவின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், வாரிசு, பீஸ்ட் படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது நிச்சயமாக தேவை என்றே கூறலாம்.
மேலும் இப்படத்தின லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர். ஒரே ஒரு நாளில் ஜெயிலர் படத்தின் சாதனையை லியோ சாதாரணமாக காலி செய்துள்ளது. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் அனைத்து வேலைகளும் சமீபத்தில் முடிவடைந்தது. இத்திரைப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பாலிவுட் சஞ்சய் தத் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் அவர் தொடர்பான படத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டது. மேலும் லியோ படத்தின் தெலுங்கு, கன்னடம் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. சஞ்சய் தத்தின் கழுத்தை ஆக்ரோஷமாக விஜய் பிடிப்பது போன்று அப்போஸ்டர் அமைந்திருந்தது. இத்திரைப்படம் தொடர்பில் தொடர்ந்து வெளியாகும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

தளபதி 68:-

விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாக தெரிவிக்கபட்ட நிலையில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக புன்னகை அரசி சினேகாவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில் 3 தோற்றங்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும் அப்பா மகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படும் நிலையில் இது தொடர்பான எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் விஜய் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றனர். கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில், தளபதி விஜய்யின் தோற்றத்தை வித்தியாசப்படுத்த (3D VFX) டெக்னாலஜியில் தளபதி விஜயின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் நினைத்தபடி தோற்றத்தை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *