kamalhassan-trending-kalki-2898-indian2-bigg-boss-7

பரமக்குடி முதல் ஆழ்வார்பேட்டை வரை

உலகநாயகன் கமல்ஹாசன்:-

தமிழ் சினிமா வரலாற்றில் குழந்தை நட்சத்திரம், நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என வளர்ந்து நடிகராக தன்னை நிலைநிறுத்தியதுடன் இயக்குநராகவும் தடம் பதித்தவர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். சாதாரண பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகமானோர் பார்க்கும் பாரிய நிகழ்ச்சியாக மாற்ற முடியும் என்று சமீபத்தில் நிருபித்தவர். பிக்பொஸ் நிகழ்ச்சியை தன் பாணியில் தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் தன் பேர் சொல்லும் பிள்ளையாக இவர் இருந்து வருகிறார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். 60 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.

உலகநாயகனின் ஆரம்ப கால வாழ்க்கை:-

நடிகர் கமல் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். இவர் ஸ்ரீவைஷ்ணவம் ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலிருந்தே, கமலுக்கு படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சந்திரஹாசன், சாருஹாசன், மற்றும் நளினி ரகு ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். சுதந்திரப்போராட்ட காலத்தில் இவரின் தந்தையுடன் சிறைசென்ற இஸ்லாமிய நண்பரான ‘யாக்கோப் ஹாசன். அந்த விடுதலை வீரருடைய பெயரை சேர்த்து தான் ‘கமல் ஹாசன்’ என்று இவரது அப்பாவால் இவருக்கு பெயர் சூட்டப்பட்டது.

1980களில் சாருகாசன் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரின் சகோதரி நளினி ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். மூத்த சகோதரர்களின் தங்களது கல்வியை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதுற்கு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். கமல்ஹாசன் சென்னையில் கல்வி கற்றார். கமலின் தந்தையார் மிக கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்கு படிக்க வைக்க எண்ணினார். அவரின் ஆசைப்படி சகோதரர்கள் இருவரும் சட்டத்துறையை பயின்றனர்.

கமல் சிறு வயது முதலே திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார். தாயாரின் நண்பி ஒருவரின் உதவியுடன் ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு மெய்யப்பச்செட்டியாரின் கண்பட்டு ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபாரிசில் 1960ஆம் ஆண்டு ஏவி.எம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளியான ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். இவர் குழந்தை நட்சத்திரமாக 6 திரைப்படங்களில் நடித்துள்ளார். தங்கப்பன் அவர்களிடம் துணை நடண ஆசிரியராக சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டில வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் கன்னியாகுமரி எனும் மலையாள படமேயாகும், இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார். இவர் தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் படத்திற்கான முதல் பிலிம்பேர் விருது வென்றார்

இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை எனும் திரைப்படத்தில் 1983 ஆம் ஆண்டில் நடித்தார். இதில் இவரின் சிறந்த நடிப்பாற்றலுக்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் 1987 இல் நாயகன் திரைப்படத்திலும், ஷங்கர் இயக்கத்தில 1996 இல் இந்தியன் திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக இந்திய தேசிய விருது கிடைத்தது. மேற்குறிப்பிட்ட இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் படம் பெற்றது. தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். இதுவரை நடிகர் கமல் 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

கே.பியும் கமலும்:-

கமல்ஹாசன் கே.பாலசந்தரின் படங்களில் ஏராளமாக நடித்தார். அவரது தயாரிப்பில் நடித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான பரிமாணங்களை கொண்டவை. கமலுக்கு ‘மை டியர் ராஸ்கல்’ என்று ஆரம்பித்துத்தான் கே.பி. இவருக்கு கடிதம் எழுதுவார். கமல் சினிமாவில் நாயகனாகும் முன்பே கே.பியின் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கே.பி.பாலசந்தரின் படங்களில் நடித்திருக்கிறார். “அரங்கேற்றம்” எனும் திரைப்படத்தில் முழு நீளகதாப்பாத்திரம் கொடுத்தார் கே.பாலச்சந்தர். நானும் ரஜினியும் ஒரே வகுப்பு நண்பர்கள் போல சொல்லப் போனால், ஒரே பெஞ்ச்மெட். கே.பாலசந்தர் என்கிற பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் அந்த பாசம் எங்களிடையே எப்பவும் உண்டு. ஆனால், எப்போதும் இம்ரான்கான் , கபில்தேவ் மாதிரி எங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியும் உண்டு’ என்று கமல் கூறுவதுண்டு. ஆனால் பாலச்சந்தர் எப்போதும் நடிகர் கமலை அவர் இல்லாதபோது மற்றவர்கள் முன்னிலையில் புகழ்வதும் அவர் முகத்திற்கு முன் “உதவாக்கரை டேய்” என்று திட்டுவதும் வழக்கம்.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கை:-

இவர் தமிழ்நாட்டில் மட்டுமன்றி பொலிவுட்டிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே, ‘ராஜ் திலக், ‘சாகர் , கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படங்கள் ஆகும். இவரின் நடிப்பில் 1990ஆம் ஆண்டுகளில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள், ‘தேவர் மகன், ‘குணா’, ‘குருதிப்புனல், ‘மகாநதி, ‘அவ்வை ஷண்முகி’, ‘இந்தியன்’போன்ற படங்கள் வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன
இதனையடுத்து இவரின் நடிப்பில் இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹேராம்’. இத்திரைப்படம் இவரின் சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ தயாரிப்பாகும். இப்படம் திரைக்கு வந்தபோது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தது. ஆனாலும் அனைத்தையும் தாண்டி இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர் ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘தெனாலி’, ‘வசூல் ராஜா MBBS’ ‘பஞ்சதந்திரம்’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. இதனையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் மிசச்சிறந்த வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து கமல் தானே நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியது. இவர் நடிப்பு என்று மட்டுமல்லாமல் அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் உள்ளார். இவர் பரதநாட்டிய கலைஞர் ஆக இருப்பதாலும் பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

கமல்ஹாசனின் பெரிதும் பேசப்பட்ட படங்கள்:-

களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, 16 வயதினிலே, நாயகன் , மைக்கேல் மதன காமராஜன் , அபூர்வ சகோதரர்கள் , குணா , மகாநதி , தேவர் மகன் , இந்தியன் , அவ்வை சண்முகி , ஆளவந்தான் , தெனாலி, தசாவதாரம்.

கமல்ஹாசன் இல்லற வாழ்க்கை:-

கமல் 1978ஆம் ஆண்டில் வாணி கணபதி என்பவரை கரம்பற்றினார். பத்து ஆண்டுகளின் பின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, சரிகாவை மணமுடித்தார். ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சரிகா அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்தார். தற்போது அவரிடம் இருந்தும் பிரிந்து தனியே வாழ்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆஸ்கர் நாயகன்:-

‘பிற மொழி படங்கள்’ பட்டியலில் இந்திய சினிமாவின் சார்பாக ‘நாயகன்’ ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆரம்பமாகி இந்தியப்படங்களில் ஆஸ்கருக்கு சென்ற படங்களில் கமல் படங்களே அதிகம். எப்போதுமே இவருக்கு சினிமா சென்டிமென்டுகளில் நம்பிக்கை கிடையாது. கமலுக்கு புத்தகங்கள் மீது எப்போதும் அலாதி பிரியம். இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் உட்பிரவேசித்து அதை முழுவதுமாக பருகிவிடுவார் எனலாம். எப்போதும் திரைப்படத்துறையின் நவீன தொழில்நுட்பங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பார்.  சினிமாத்துறைக்கு கமல் நடிகனாக வேண்டும் என்ற ஆவலில் வரவில்லை, இயக்குநராகவேண்டும் என்ற ஆவலுடன்தான் திரைப்படத்துறைக்கு வந்தார். அவர் இயக்குநாரகி இருந்தால், நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால், நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே கிடைக்காமல் போயிருக்கும் என்று தான் கூறவேண்டும். தமிழ் சினிமாவில் பேசும் படம் வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகும் கூட பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார். அந்தப் படம், ‘பேசும்படம்’. படம் பேசியது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா மணிரத்னம், என்று திரைத்துறை ஜாம்பவான்களுடன் பணியாற்றிய கமல், ஏனோ மகேந்திரனுடன் படம் பண்ணவேயில்லை.

கமலின்  திரைப்படக் குறிப்பு:-

 • 1960 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
 • 1962 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
 • 1976 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
 • 1977 ஆம் ஆண்டு வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
 • 1977 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
 • 1981 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

கமலின் இலக்கிய படைப்புகள்:-

தமிழ் மொழி மீதும் தமில் இலக்கியத்தின் மீதும் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், அவரின் எழுத்தாற்றலாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இப்பத்திரியையை ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. இவர் தன்னுடைய ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, காஷ்மீர் மோதல், போதைபொருள் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

கமலின் பொதுநலப் பணிகள்:-

‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல்வேறு சமுதாயப் பொது நல அமைப்புகளை திரட்டி பலர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், இவரது ரசிகர்கள். பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், ஏழை எளியோருக்கு உதவுவது, கணினி போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், வழங்கினார்.

கமல்ஹாசன் பெற்ற விருதுகள்:-

 • சிறந்த நடிப்பிற்காக இந்தியன், மூன்றாம்பிறை, நாயகன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
 • அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 18 முறை பிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
  1990 ஆம் ஆண்டில் ‘பத்மசிஸ்ரீ விருது’ பெற்றார்.
 • 2005 ஆம் ஆண்டில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.

கமலின் அரசியல் பிரவேசம்:-

நடிகர் கமல், தன் அரசியல் பிரவேசத்திற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அக்கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளியிட்டு ஏற்றி வைத்தார். ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலும் அந்தக் கொடியில் இருந்தது. இக்கொடியின் நடுப்பகுதியில் கறுப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும். 2020ஆம் ஆண்டு டிசம்பர 13ஆம் தேதி 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை கமல் ஆரம்பித்தார். சட்டமன்றத் தொகுதிகளில் 142 வேட்பாளர்களை நிறுத்தினார் அத்துடன் திமுக அல்லது அதிமுக எவருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். ஆனாலும் இவரின் கட்சி தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவருடன் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகின்றார். மிகப் பிரமாண்டமாக மற்றும் அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் தயாராகி வருகின்றமை யாமறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *