atlee-kumar-thalapathy-vijay-jawan-shah-rukh-khan-trending

அசத்தலான அட்லீயின் கதை

அட்லீ:-

தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களுக்கும் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு 2013ஆம் ஆண்டில் “ராஜா ராணி” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து வரிசையாக தெறி, மெர்சல், பிகில் என்ற படங்களை இயக்கியவர். இவரின் தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். எல்லா இயக்குனருக்கும் தனிப்பட்ட ஒரு ஸ்டைல் உண்டு. அந்தவகைளில் அட்லீ தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே முத்திரை பதித்தார். இவரின் முதல் படமான ராஜா ராணி 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படத்தில் ஆர்யா, நயன்தாரா இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார்கள். அடுத்து இவரது இயக்கத்தில் வெளியான தளபதி விஜயின் தெறி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்த படமான தளபதி விஜயின் மெர்சலும் 100 கோடி ரூபாய் பட்ஜெட், என எகிற அட்லீயின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் சும்மா அசுர வேகத்தில் வளர்ந்தது.

அட்லீயின் பிறப்பு:-

1986 ஆம் ஆண்டு மதுரையில் செப்டம்பர் 21ஆம் தேதி பிறந்தார். இவரின் இயற்பெயர் அருண் குமார் என்பதாகும் . இவரது அட்லீ என்ற பெயருக்கு பின்னால், பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான “கிளமென்ட் அட்லீயின் ஞாபகமாக அவரது பெரியப்பா இவருக்கு வைத்த செல்லப் பெயர் தான் அட்லீ. இவர் சென்னை சத்தியபாமா பல்கலைகழகத்தில் இளங்கலை விஸ்காம் கற்று முடித்துள்ளார். அருண் குமார் என்ற பெயரில் அநேகமான பேர் இருப்பார்கள் நீ உன்னை அட்லீ என்றே அறிமுகப்படுத்திக்கொள் என்ற தன் தாயின் அறிவுரையின்படி தன் முதல் குறும்படத்திலிருந்து இவர் தன்னை அட்லீ என்றே அறிமுகம் செய்து கொண்டார்.

அட்லீயின் இளமைக்காலம்:-

“என் மேல் விழுந்த மழைத் துளி” இது அட்லீயின் முதல் குறும்படமாகும். இது தேசிய அளவில் இரண்டு விருதுகள் வாங்கிட அட்லீ என்ற பெயர் நிரந்தரமாகிவிட்டது. இதனையடுத்து சிவகார்த்திகேயன், சதீஷை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினார். இக்குறும்படம் சிறந்த வரவேற்பைக் கொடுத்தது. இவருடைய குடும்பம் நடுத்தரவர்க்க குடும்பம் என்றாலும் இவர் கனவுக்கு இவரின் குடும்பத்தார் மிகவும் துணையாக இருந்துள்ளார்கள். அட்லீயின் தாயார் அவர் குறும்படம் எடுக்க தனது தங்க சங்கிலியை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளாராம்.

இயக்குனர் ஷங்கரிடம் நேர்காணலுக்காக இவர் தன்னுடைய சுயவிவரம் மற்றும் தன்னுடைய இரு குறும்படங்களை அவருக்கு அனுப்பி வைக்க, அதை பார்த்தவுடன் பிடித்துப்போக இயக்குனர் ஷங்கர் உடனடியாக அட்லீக்கு உதவி இயக்குனராக சேர்ந்துகொள்ளுமாறு தொலைபேசியில் அழைத்தாராம். அவரது வாழ்க்கையின் திருப்புமுனை இதுதான் என அட்லீ கூறியிருக்கிறார்.

அட்லீ சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது ஷங்கர் சொல்ல சொல்ல அட்லீ தான் படப்பிடிப்பு தளத்தில் எழுதுவாராம், அந்தப் பயிற்சி தான் தனக்கு வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் இன்று வரை உதவிகரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து இவர் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.

அட்லீயின் இல்லற வாழ்க்கை:-

கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லீ ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ப்ரியா விஜய் சீரியலில் ஒலிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார் . தற்போது எட்டு வருடங்களின் பின் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அட்லீயின் பிளாக் பஸ்டர் ஹிட் குடுத்த படங்கள்:-

அட்லீ 2013ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமாகி அந்தப்படத்தின் மூலம் “Love After Love Failure”என்பதை மிகச்சிறப்பாகவும் அழகாகவும், உருக்கமாகவும் திரையில் காட்டியிருப்பார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சத்யன், சந்தானம் என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திரங் களை மிக மிக நேர்த்தியாக கையாண்டிருப்பார். இத்திரைப்படம் விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. அத்தோடு வெளியாகி நூறு நாட்களையும் தாண்டி இப்படம் வெற்றிப்படமானது.

அட்லீ தளபதி விஜய் காம்போ:-

இதனையடுத்து தளபதி விஜயை வைத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் , “தெறி” போலிஸ் படத்தை இயக்கினார். 2016ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இத்திரைப்படம் வெளிவந்தது. இப் படத்தில் விஜயின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். உதிரிப் பூக்ககள், முள்ளும் மலரும் படங்களை இயக்கிய மகேந்திரன் இதில் வில்லனாக நடித்தார். விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், மகேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திரங்களிக் நடிப்பில் இப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியான ஆறே நாட்களில் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அப்பாக்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தால் நல்ல சமுதாயம் அமையும் என்பதை படத்தின் மையமாக கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, ஒப்பந்தத் தொழிலாளர் , குழந்தை தொழிலாளர் ஆகிய பிரச்சனைகளையும் இத்திரைப்படத்தில் அட்லீ கையாண்டிருப்பார்.

இதன் பின்னர் மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிப்பில், நூறு கோடி பட்ஜெட்டில் (தேனாண்டாள் தயாரிப்பில் மெர்சல் நூறாவது படம்) தனது மூன்றாவது படமான மெர்சல் திரைப்படத்தை தயாரித்தார். விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா,யோகி பாபு என தெறி படத்தை போலவே ஏராளமான நட்சத்திரங்கன் மெர்சலிலும் நடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவரது முதல் இரண்டு படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார், ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான இசையில் மெர்சல் வெளியானது. 2017ஆம் ஆண்டு இளையதளபதியின் பிறந்த நாளான ஜூன் 21ஆம் தேதி, மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது. பர்ஸ்ட் லுக பெரும் வரவேற்பை பெற்றது. 2017ஆம் ஆண்டு அட்லீயின் பிறந்த நாளான செப்டம்பர் 21ஆம் தேதி மெர்சல் படத்தின் டீசர் வெளிவந்தது. வெளிவந்த ஒரே நாளில் 11 கோடி பேர் இணையத்தில் பார்த்து ரசித்தார்கள். வெளியான நான்கு மணி நேரத்திலேயே 6இலட்சம் லைக்குகள் பெற்று உலகின் மிக அதிக லைக்குகள் பெற்ற டீசராக மெர்சல் டீசர் உருவெடுத்தது. அந்த ஆண்டின் தீபாவளிக்கு படம் ரிலீசாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தளபதி விஜயுடன் தெறி மற்றும் மெர்சல் திரைப்படங்கள் மெகா ஹிட் வெற்றியை கொடுத்தது. இதனையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் பிகில் திரைப்படத்தில் இணைந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்க ஜி.கே.விஸ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ரூபனின் தொழில்நுட்பத்தில் பிகில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு தயாரித்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, ஆத்மீகா, டானியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஸ்ரொப், சாய் தீனா, கதிர், அம்ரித்தா ஐயர் என இத்திரைப்படத்திலும் ஏராளமான நடட்சத்திரங்கள் நடித்தார்கள்.

அட்லீயின் தயாரிப்பாளர் படலம்:-

அட்லீ இயக்குனர் மட்டுமன்றி A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து ஜீவா நடிப்பில் “சங்கிலி புகிலி கதவ தொற” படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீயின் ஜவான் – ஷாருக்கான்:-

அட்லீ நடிகர் தன் இயக்கத்தில் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை சாத்தியமாக்கியவர். இதற்கு முன் ராஜா ராணி என்ற வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார் அட்லீ. இத்திரைப்படத்திலேயே ரசிகர்களின் விருப்பத்திற்குள்ளானார். இதற்கு பின்னரே விஜய்யின் படங்களை இயக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றிருந்தார். ரசிகர்களின் மனங்களை கவரும் வித்தையை நன்கு தெரிந்து வைத்துள்ளார் அட்லீ என்று தான் சொல்ல வேண்டும். இவரது தொடர் வெற்றிக்கான காரணமே இந்த வித்தைதான் எனலாம். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை ஜவான் மூலம் சிறப்பாக அமைத்துக் கொண்டுள்ளார். இவரின் முதல் பாலிவுட் திரைப்படத்தில் பாலிவுட்டின் கிங் என புகழப்படும் ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதை சிறப்பாக பயன்படுத்தியும் உள்ளார்.

தற்போது ஜவான் வெளியாகி வெற்றிகரமாக 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவ்வாண்டில் வெளியான ஷாருக்கானின் மூன்று படங்களில் இரு படங்கள் 500 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளன. ஜனவரியில் வெளியான பதான் மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஜவான் என ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி ரூபாய் கலெக்ஷன் படங்களை சாத்தியப்படுத்தியுள்ளார் ஷாருக்கான். இந்தப்படத்தின் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தமையை தொடர்ந்து அட்லீயும் 1000 கோடி ரூபாய் கிளப் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஜவானுக்கு முன்னாள் சந்திப்பு அட்லீ ஷாருக்கான்:-

இதனிடையே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் தான் விஜய் மற்றும் தன் மனைவி பிரியாவுடன் இணைந்து அடுத்த படத்திற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஷாருக்கான் பட வாய்ப்பு குறித்து தான் விஜய்யிடம் தெரிவித்ததாக அட்லீ தெரிவித்துள்ளார். இதனை அறிந்த விஜய், அட்லீயை பாராட்டியதோடு மட்டுமன்றி இதுபோன்ற வாய்ப்பை நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதற்கு பின்னர் இலகுவாக அடுத்தக்கட்டத்திற்கு நகர அறிவுறுத்தியதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். இதற்குப்பின்னரே தான் ஷாருக்குடன் இணைந்து ஜவான் படத்தில் பணியாற்றியதாகவும் தற்போது தனக்கு கிடைத்துள்ள பாராட்டுக்களுக்கு எல்லாம் விஜய்தான் சொந்தக்காரர் என்றும் அட்லீ குறிப்பிட்டுள்ளார். இந்த பாலிவுட் வெற்றியையடுத்து அட்லீக்கு ஹாலிவுட்டிலும் படமியக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் அடுத்தப்படத்தில் இணையவிருந்த நிலையில்தான் அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். சர்வதேச அளவில ஜவான் படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ள அட்லீ, மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த சிறப்பு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அட்லீ கலவையான விமர்சனக்ளை பெற்ற போதிலும் எப்போதுமே இவர் வெற்றிபட்படத்திற்கான சூட்சமங்களை அறிந்தவர் என்பதால் அவர் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு பல கதைகள் தேவை – அட்லீ
ஒரு படத்தை இயக்க எனக்கு பல கதைகள் தேவை அதாவது பார்வையாளர்களின் பலதரப்பட்ட ரசனைக்கு ஏற்றபடி ஒரு படத்துக்குள் பல கதைகள் இருப்பது அவசியம் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

மும்பையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட ரசனைகள் இருப்பதால் படத்தை இயக்க எனக்கு பல கதைகள் தேவை என இவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஜவான்’ திரைப்படத்தை பொறுத்தமட்டில் சிலக்கு தந்தை – மகன் உறவு பிடித்திருக்கும், சிலருக்கு ஆக்ஷன் பிடித்திருக்கும், சிலருக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் பிடித்திருக்கும். ஏதோவொரு வகையில் இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கும். அதுதான் என்னுடைய பாணி. நான் அதை உறுதியாக நம்புகிறேன் என இவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் ஒரு திருவிழாவுக்குச் சென்றால் அங்கே ராட்டினம் இருக்கும், வகை வகையான சிற்றுண்டிகள், அதுமட்டுமன்றி பலவகையான நிறைய விடயங்கள் இருக்கும். திருவிழா முடிந்து வீட்டுக்கு வரும்போது நாம் முழு மகிழ்ச்சி மற்றும் திருப்தியுடன் இருப்போம். அவ்வாறு தான் என் படத்தை பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று என் விருப்பம். என் திரைப்படம் உங்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கை தரவேண்டும். படம் பார்த்து விட்டு செல்லும்போது ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டோம் என்ற ஒரு பொறுப்புணர்வு கிடைக்க வேண்டும். இவ்வாறு திரைப்படத்தை உருவாக்குவது தான் என்னுடைய கொள்கை. என்னால் ஒரே ஒரு கதையை மட்டும் வைத்து எப்போதும் கதை எடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஜவான் ஷாருக்கான்:-

பாலிவுட் கிங் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் , ப்ரியாமணி விஜய் சேதுபதி , சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இதுவரையில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கியுள்ளது

அட்லீயின் சொத்து மதிப்பு:-

அட்லீ தனது முதல் படமான ராஜாராணி திரைப்படத்துக்கு சம்பளமாக ரூ.20 லட்சம் ரூபாவையும், தெறி படத்திற்காக 3 கோடி சம்பளமும், மெர்சல் படத்திற்காக ரூ. 8 கோடியும், பிகில் படத்திற்காக ரூ. 15 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது வெளியாகிய ஜவான் படத்துக்கு மட்டும் ரூ.40 கோடி அட்லீக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன்படி ரூ.60 கோடி சொத்துக்களை அட்லீ தன் வசம் வைத்திருப்பார் என நம்பத்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *