oscar-mm-keervani-margathamani-mmkreem-trending-RRR-rajamouli

மரகதமணியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரசியமான தகவல்கள்

மொழிகளை கடந்த கீரவாணி

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமான RRR ல் உள்ள ‘நாட்டு நாட்டு ‘ பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் சிறந்த இசை இயக்குனருக்கான தேசியத் திரைப்பட விருதையும் வென்ற, புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்படுகிறார்.

63 வயதில், அவர் புதிய தலைமுறையை ஈர்க்கும் இசையை உருவாக்க முடியும் மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற இவர், தெலுங்கில் கீரவாணி, தமிழில் மரகதமணி மற்றும் இந்தியில் க்ரீம் என மூன்று பெயர்களில் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு மாத்திரமன்றி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றினார். வௌவ்வேறு மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பல பாடல்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவை. மேலும் இவர், இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் ‘அழகன்’, ‘ நீ பாதி நான் பாதி’, ‘ வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’ ஆகியனவாகும்.
அத்தோடு, இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு எம்.எம்.கீரவாணியே பாகுபலி திரைப்படத்தின் இரு பாகங்களுக்கும் சிறந்த இசையை வழங்கியுள்ளார்.

மரகதமணியின் பிறப்பு:-

தெலுங்கு திரைப்பட இசையுலகின் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழும் எம்.எம்.கீரவாணி, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் கோவூரில் 1961 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிறந்தார். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி என்று பரவலாக அறியப்படும் இவரின் இயற்பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி என்பதாகும். இவருக்கு வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்களும் உள்ளன. இவரது தந்தையான சிவசக்தி தத்தா திரைப்பட பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமாகயிருந்தவர். கீரவாணி இசையின் மீதான பிரியத்தின் காரணமாக தனக்கு அந்த பெயரையே தந்தை சூட்டிவிட்டதாக கீரவாணி பல நேர்காணல்களில் கூறியுள்ளார்.

இவர் , இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இசையமைப்பாளர்கள் எம்.எம்.ஸ்ரீலேகா, கல்யாணி மாலிக், எழுத்தாளர் எஸ்.எஸ்.காஞ்சி மற்றும் திரைக்கதை ஆசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரின் உறவினர் ஆவதுடன், திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத்தின் மருமகன் ஆவார்.

மரகதமணியின் இல்லற வாழ்க்கை:-

இவர் தனது வாழ்க்கைத்துணையாக ஸ்ரீவல்லி என்பவரை கரம்பற்றினார். இவர் படங்களில் லைன் புரொடியூசராக பணியாற்றி வருகிறார் . இவர்களுக்கு ஸ்ரீ சம்பா, கலா பைரவா என்ற இரு மகன்களும், பைரவா கீர்த்திவாணி என்ற மகளும் பிறந்தனர். இவர்களும் திரையுலகின் நடிகர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.

மரகதமணியின் இசையுலகப் பிரவேசம்:-

1987 இல் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்ததன் மூலம் இசையுலக வாழ்க்கையை கீரவாணி தொடங்கினார்.
இவர், 1990 இல் ‘கல்கி’ என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். எனினும் அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு மௌலி இயக்கத்தில் வெளியான ‘மனசு மகாத்மா’ என்ற தெலுங்கு படமே கீரவாணி இசையமைப்பில் வெளியான முதல் திரைப்படமாக கருதப்பட்டது.
1991 ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராமையா காரி மனவராலு’ மற்றும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஷனா ஷனம்’ என்ற திரைப்படங்கள் கீரவாணியின் திரையுலக பயணத்தில் முக்கியமானவையாகும். ‘ஷனா ஷனம்’ திரைப்படத்தின் மூலமே பெரும் புகழை கீரவாணி அடைந்தார். இதனையடுத்து, கீரவாணிக்கு தென்னிந்தியத் திரைப்படத் துறைகள் முழுவதிலும் இருந்து வாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் மரகதமணி என்ற பெயரில்:-

1989 ஆம் ஆண்டு வெளியான ‘புது புது’ அர்த்தங்கள் படத்தின் போது இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரான இளையராஜாவுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் விளைவாக, தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலசந்தர் (கே.பி.) ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக் கொண்டிருந்தார். இதன்போதே கீரவாணி தமிழ் திரையுலகிற்கு கொண்டுவரப்பட்டார். தமிழில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கும். என்றாலும் சில மறக்கமுடியாத பாடல்களைத் தந்து ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தார்.

1990 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் தனது ‘அழகன்‘ படத்தின் மூலம் கீரவாணியை தமிழில் மரகதமணி என்ற பெயரில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

மரகதமணியின் காதல் மெலொடி பாடல்கள்:-

அந்தப் திரைப்படத்தில் இடம்பெற்ற “மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா..” என்ற பாடல் மரகதமணியின் காலத்தால் அழியாத பாடல் ஆகும். அருமையான இசை, அட்டகாசமான வரிகள் என எந்தத் தருணத்திலும் கேட்கத்கூடிய பாடல். (கதாநாயகனான மம்மூட்டியும் நாயகியான பானுப்ரியாவும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடும்போது பின்னணியில் ஒலிக்கும்.) வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சந்தியா ஆகியோரின் குரலும் சேர்ந்து மறக்க முடியாத பாடலாகும். இந்தப் பாடல் தான் மரகதமணியின் திறமையை வெளி உலகிற்கு காட்டியது.

அத்தோடு, அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா‘, ‘ஜாதிமல்லி பூச்சரமே‘ போன்ற காதல் மெலொடி பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ‘துடிக்கிறதே நெஞ்சம்’ என்ற துள்ளல் இசைப்பாடல், ‘கோழி கூவும் நேரம் ஆச்சு’ என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் ரசகர்களின் இதயங்களை மரகதமணி கொள்ளை கொண்டார். இந்தப் பாடல்களின் வெற்றிக்குப் பின்னர், சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் இசையமைப்பாளராக மரகதமணி திகழ்ந்தார்.

கே பாலசந்தரும் மரகதமணியும்:-

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தநீ பாதி நான் பாதி‘ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை மரகதமணி பெற்றார். அந்தப் படத்தில் ‘நிவேதா’ என்ற ஒரு வார்த்தை மட்டுமே பாடல் நெடுக, வைத்து சாதனை செய்து காட்டினார். மரகதமணி இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்.
அதேபோல ‘காலமுள்ள வரை’ பாடலை சிறந்த மெலோடி பாடலாக இசையமைத்திருந்தார். முதல் முறை கேட்கும்போதே பிடித்துப்போகும் இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடியிருந்தார்கள். அதனை தொடர்ந்து, பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’, படத்தில், வைரமுத்து எழுதிய “கம்பங்காடு கம்பங்காடு…” பாடலை மரகதமணியும் சித்ராவும் இணைந்து பாடியிருந்தார்கள். அதில் மரகதமணி கொடுத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டது. ‘பாட்டொன்று கேட்டேன்‘, ‘சிவந்த மலர்‘ படங்களுக்கு மரகதமணி இசையமைத்தார்.

அடுத்து 1992 இல் வந்த ‘சேவகன்’ படத்தில் (நடிகர் அர்ஜுனும் குஷ்புவும் நாயகன் நாயகியாக நடித்திருப்பார்கள். ) ‘நன்றி சொல்லி பாடுவேன்’ என்ற பாடல் இன்றும் ரசிகர்களிடையே முணுமுணுக்கப்படுகின்றன.

1993ல் வெளியான ஜாதிமல்லி படத்தில் வைரமுத்து எழுதிய “மறக்கமுடியவில்லை மறக்கமுடியவில்லை” என்ற பாடலை மரகதமணியின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் சித்ராவும் பாடியிருந்தார்கள். இந்தப் பாடல் வெளியான தருணத்தில் பலரால் அப்போது தொடர்ந்து பாடப்பட்டன.

இதனையடுத்து, 1997 இல் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘கொண்டாட்டம்’ படங்களுக்கு மரகதமணி இசையமைத்துள்ளார். சிபிராஜின் ‘ஸ்டண்ட் நம்பர் 1’ படத்தில் ‘விழாமலே இருக்க முடியுமா’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர், நீண்ட இடைவெளிக்குப்பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திலும் மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி – ஸ்ரீதேவி நடித்த ‘தேவராகம்’ படத்துக்கு இசையமைத்தார்.

மரகதமணியின் உச்சம்:-

தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘நான் ஈ’, ‘மாவீரன்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அவர் அதிக பிரபலமடைந்தார்.
2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி 1′, ‘பாகுபலி 2′ திரைப்படம் எம்.எம்.கீரவாணிக்கும் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

அதன்பிறகு, தெலுங்கில் வெளிவந்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காவியமான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் உலகளாவிய அங்கீகாரம் பெற்றன. இந்த பாடல் படத்திற்கு வெளியே ஒரு வைரல் உணர்வாக மாறியுள்ளது, யூடியூப்பில் 122 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நாட்டு நாட்டு பாடல் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த மக்களையும் ஈர்த்திருந்தன.

Chandramukhi 2:-

அத்தோடு, அண்மையில் வெளியாகவுள்ள லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கும் கீரவாணி இசையமைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் எம்.எம்.க்ரீம்.

தெலுங்கு திரையுலகில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவர் பாலிவுட்டில் எம்.எம்.க்ரீம் என்ற பெயரில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

1994 ஆம் ஆண்டு கிரிமினல் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அவர் அறிமுகமானார்.
2002 ஆம் ஆண்டில் வெளியான Sur Theme (The Melody Of Life) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘Aa Bhi Ja Aa Bhi Ja’ என்ற பாடல் வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான பாடலாக இன்றும் பேசப்பட்டுவருகிறது.

2003 ஆம் ஆண்டு ஜிஸ்ம் படத்தில் இடம்பெற்ற மெலொடி பாடல்கள் ஹிந்தி ரசிகர்களின் மனங்களில் பெருபெற்றி பெற்றது.

ஹிந்தியில்கிரிமினல்‘, ஷாருக் கான் நடித்த ‘Paheli‘, பிபாஷா பாசு நடித்த ‘Jism‘ உள்பட 26 படங்களுக்கு இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, மரகதமணியின் தாய்மொழியான தெலுங்கில் கரானா மொகுடு, சுந்தரகாண்டா, அல்லரி மொகுடு, ஆபத்பாந்தவுடு, மாத்ரு தேவோ பவா, மேஜர் சந்திரகாந்த், பெல்லி சண்டாடி, பவித்ரா பந்தம் மற்றும் அன்னமய்யா என்பன மிகவும் பிரபலமான படங்கள் ஆகும்.

பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளராக கீரவாணி:-

முடிசூடா மன்னராக புகழ்பெற்றுள்ள எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர், பின்னணி பாடகர், எழுத்தாளர் என இசையமைப்பாளர் பணியுடன் பல பணிகளை செய்துவரும் பன்முகக் கலைஞர் ஆவார். இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் என்று குறிப்பிடுவதையே தனக்கு பெருமையாக இருப்பதாக நேர்காணல் ஒன்றில் எம்.எம்.கீரவாணி கூறியுள்ளார். சிறந்த எழுத்தாளர் என்பதே தனக்கு மகிழ்ச்சி தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இசையமைத்த பல பாடல்களை அவரே பாடியுள்ளதோடு, 15 தெலுங்கு படங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீரவாணி வென்றுள்ள விருதுகள்:-

  • 1991 ஆம் ஆண்டு ‘அழகன்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்தது.
  • 1997 ஆம் ஆண்டு அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
  • சிறந்த ,இசைக்காக, ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகளை 11 முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை 13 முறையும் கீரவாணி வென்றிருக்கிறார்.
  • இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி 2 படத்திற்கு சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதை கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
  • இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்.) திரைப்படத்தில் ,இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு‘ பாடல் மூலம் கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.

மரகதமணியும் ஆஸ்கார் அகாடமி விருதும்:-

ஆக்‌ஷன் படமான RRRல் இருந்து “நாட்டு நாட்டு” பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிறகு, சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதையும் (பின்னணி ஸ்கோர்) வென்ற பிறகு, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ரசிகர்களின் மனதைக் இதயத்தைக் கவர்ந்தார். எனினும் 1990களின் முற்பகுதியில் இருந்து, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் அறியப்பட்ட கீரவாணியை ‘பாகுபலி இசையமைப்பாளர்’ அல்லது ‘ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்’ என்று முத்திரை குத்துவது கவலையளிப்பதாகவே இருக்கிறது. அவ்வாறு குறிப்பிடுபவர்கள் பலர் பிறப்பதற்கு முன்பே கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

ஆஸ்கார் விருதில் மரகதமணியின் உரை:-

‘தான் கார்பெண்டர்ஸ் (Carpenters) இசையைக் கேட்டு வளர்ந்தேன்’ என்று ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *