vijay-sethupathi-trending-jawan-ott-tamil-cinema

விஜய் சேதுபதி கடந்து வந்த வித்தியாசமான அனுபவங்கள்

விஜய் சேதுபதி:-

தமிழ் சினிமாவின் ஜனரஞ்சகமான நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் பிறந்தார். கணக்ககாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த இவருக்கு கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவருக்கு எவ்விதமான சினிமா பின்னணியும் இல்லை. தன் திறமையை மட்டுமே நம்பி கோலிவுட்டில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் விஜய் சேதுபதியும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வருகிறார்.

2010ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். 2012இல் பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கை:-

1978ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பிறந்தார். தான் எப்போதும் பள்ளியில் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டு, பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு எப்போதும் பெரிதான விருப்பம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவர் துபாயில் இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் கணக்காளராக பணி புரிந்தார். 2003இல் அவருக்கு அவ்வேலை பிடிக்காததால் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினார். இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று நிழல்படக்காரர் ஒருவர் சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க ஒரு கருவியாக இருந்தது என்று இவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கை:-

இவர் ஆரம்பத்தில் கூத்துப்பட்டறையில் கணக்காளர் பணியில் சேர்ந்தார். நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு அதன் மூலம் தனக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இவர் நடிப்பில் பெண் என்ற தொலைக்காட்சித் தொடர் வெளியாகியது. மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் சேர்ந்து பல்வேறு குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நோர்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.

இயக்குநர் செல்வராகவன் நடத்திய புதுப்பேட்டை படத்திற்கான திறன் தேர்வில் கலந்து கொண்டு நடிகர் தனுசின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்த ‘அகண்ட’ என்ற தமிழ் பதிப்பில் முன்னணி கதாநாயகனாக நடித்தார், கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் எதிர்மாறான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் ஏனோ திரைக்கு வரவில்லை. இதனையடுத்து இவரது நடிப்பில் பிரபு சாலமனின் ‘லீ’ திரைப்படம் மற்றும் சுசீந்திரனின் ‘நான் மகான் அல்ல’ ‘வெண்ணிலா கபடிக் குழு’ என்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். தன்னை முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் இயக்குநர் சுசீந்திரனே என்று இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு இராமசாமியிடம் சுசீந்திரன் இவரை அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து சீனு ராமசாமி விஜய் சேதுபதியை அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

2012ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. கதைநாயகனுக்கு எதிரியாக சுந்தரபாண்டியனில் இவர் நடித்திருந்தார். பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திலும் கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா ’படத்திலும் முன்னணி காநாயகனாக நடித்தார். நளன் குமரசாமியின் ‘சூது கவ்வும் ’என்ற படத்திலும் முன்னணி கதாநாயகனாக நடித்தார். ‘பண்ணையாரும் பத்மினியும் ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் ‘மக்க கலங்குதப்பா’ நடனம் எப்பொழுது ஒளிபரப்பப்பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். ஆவ்வளவிற்கு யதார்த்தமாக அவர் தனது பாணியில் ஆடியிருப்பார். இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு விக்ரம் வேதா என்ற பரபரப்பூட்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் இருவருக்கும் மிக மிக வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

2018இல் இவரது நடிப்பில் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ’ மற்றும் ‘ ஜூங்கா’ என்ற திரைப்படங்கள் வெளியாகின. ‘ ஜூங்கா’ திரைப்படத்தை இயக்குனர் கோகுல் என்பவர் இயக்கியுள்ளார். இதனையடுத்து இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘செக்கச்சிவந்த வானம் ’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தொடர்ந்து த்ரிஷாவுடன் ‘96’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘பேட்ட’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். ‘96’ இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேட்பையும் பெற்றது. மேலும் இவரது 25ஆவது திரைப்படமான சீதக்காதி திரைப்படத்தில் 75 வயதான முதிய தோற்றத்தில் நடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இவர் 2016இல் தொடர்ந்து 6 படங்களை நடித்து, பின்னர் 2017இல் தொடர்ந்து 5 படங்களும், 2018இல் தொடர்ந்து 7 படங்களிலும் நடித்துள்ளார். ‘சாய் ரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் 2019 ஆம் ஆண்டு நடித்துள்ளார். இவரின் முதல் தெலுங்கு திரைப்படமாகும்

தமிழ் சினிமாவை தாண்டி இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, இந்தியில் ‘மும்பைக்கார்’ படத்தையடுத்து தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவருக்கு எதிர்மாறான கதாபாத்திரம் என்றாலும் அவர் அதிலும் தன் நடிப்புத்திறனை மிகத் திறமையாக எல்லோரையும் கவரும் வண்ணம் நடித்திருப்பது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடிகளைக் கடந்து வசூல் சாதனை நடத்தி வருகிறது. மேலும் தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை பாகம் 2’, மௌன படமான ‘காந்தி டாக்கீஸ்’, மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கும் புது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கத்ரீனா கைஃப்புடன் விஜய் சேதுபதி:-

இதனைத்தொடர்ந்து இவர் பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் டொப் நடிகையான பிரபல நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகை ராதிகா அப்தே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த கிறுஸ்துமஸ்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஏனோ பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விஜய் சேதுபதி, இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் முன்னதாகவே வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் 50ஆவது படம்:-

விஜய் சேதுபதி நடிக்கும் 50ஆவது படம் ‘மஹாராஜா’. இத்திரைப்படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “என்னை; வாழ்த்தியும் திட்டியும இந்த உயரத்துக்கு கொண்டு வந்த என் அன்பான ரசிகர்களுக்கும் இந்த ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மனிதனை பொறுமையும் அனுபவமும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை எனக்கு கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படம் உங்களுக்கு பிடித்தது போலவே மிக அற்புதமாக வந்திருக்கிறது. என் சினிமா பயணத்தில் என் இந்த ஐம்பதாவது படம் என்பது நிச்சயம்; ஒரு மைல்கல். அது பல்வேறு வகையான ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது.

அனுராக் காஷ்யப் நல்ல மனிதர். அவரை நான் ஒருநாள் போனில் தொடர்புகொண்டு இந்தப்படத்தில் நடிக்க கேட்டன். ‘உனக்கு பிடிச்சிருந்தா பண்ணலாம்’ என்றார். 2016-ம் ஆண்டு அனுராக் காஷ்யப் தயாரிப்பில் நான் முதன் முதலில் இந்தியில் ஒரு படம் நடிக்கலாம் என்ற சூழல் அமைந்தபோது நடிப்பதாக இருந்தது. சில பல காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அவர் ஒரு சிறந்த நடிகர். நானும் அவரும் இணைந்து இன்னும் ஏராளமாள படங்களில் பணிபுரிய வேண்டும் என விருப்பம்” என்றார். தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று இயக்குநர் நிதிலன் சொன்னது திமிர் கிடையாது. படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் இல்லற வாழ்க்கை:-

விஜய் சேதுபதி ஜெசி என்ற பெண்ணை சந்தித்து அவரை காதலித்து அதன் பின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சூர்யா, ஸ்ரீஜா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தன் மகனுக்கு சூர்யா என்றும், மகளுக்கு ஸ்ரீஜா என்றும் பெயர் சூட்டி இருக்கிறார். தனது பள்ளி கால நண்பன் சூர்யாவின் நினைவாக தான் தன் மகனுக்கு சூர்யா என விஜய் சேதுபதி பெயர் வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் நம்மவர் ஆடிக்ஷன்:-

கமலின் நம்மவர் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 13 வயதிலேயே ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவர் பார்க்க சின்ன பையன் போல இருப்பதால் அவரை வேண்டாம் என படக்குழுவினர் நிராகரித்துள்ளனர். இத்திரைப்படததில் இவரது நண்பர்கள் பலரும் அதில் தேர்வாகி படத்தில் நடித்தார்களாம். நம்மவரில் ரிஜெக்ட் ஆனாலும் தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியும் மூன்று தேசிய விருதுகளும்:-

விஜய் சேதுபதி நடிப்பில் முதில் வெளிவந்த திரைப்படமான ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு மொத்தம் மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது. இத்திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருது மற்றும் சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகை விருதையும் பெற்றுத் தந்தது. கவிஞர் வைரமுத்துக்குகள்ளிக்காட்டில் பிறந்த தாயே‘ எனும் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் சீரியலும்  மற்றும் டிவி ஷோ:-

2006 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளிவந்த பெண் என்ற டிவி தொடரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர் 195 எபிசோடுகள் ஒளிபரப்பானது இதைத்தொடர்ந்து சன் டிவியில் மாஸ்டர் செஃப் ஷோவை இவர் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *