ajith-kumar-ak-vidamuyarchi-trending-viral-post

விடாமுயற்சி நாயகனை வியந்து பார்த்த தமிழ் சினிமா

அஜித்குமார்:-

தல என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் எவ்வித சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடினமான உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் என்றென்றைக்கும் நிலைத்து இருப்க்கிறார். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரை பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி கீழே பார்ப்போம்.

அஜித்குமாரின் பிறப்பு:-

இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் அஜித் குமார் பிறந்தார். இவரது அண்ணன் அனூப் குமார் நியூயோர்க்கில் பங்குத்தரகராகவும், தம்பி அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

அஜித்குமாரின் ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:-

இவர் ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும் சென்னையில் தான் அதிகமாக வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் ஆரம்பித்தார். சிறு வயது முதல் கல்வியில் அதிக நாட்டம் இல்லாமலேயே இருந்து வந்துள்ளது. இதனால் இவர் தனது பெற்றோர்களின் விருப்பத்தையும் மீறி பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

அஜித்குமாரின் ஆரம்பகாலப் பணிகள்:-

பள்ளிக் கல்வியை பாதியிலே கைவிட்ட அவர், இரு சக்கர பைக் மெக்கானிக் பணியில் சேர்ந்தார். கார், பைக் கையாள்வதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை செலுத்தும் முறையைக் கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். தனது தொழில் ட்ராக் பைக் ரேஸ் தான் என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ள பணம் தேவைப்பட்டதால், இடையிடையே சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். இவருக்கு பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், வணிக முகவர்கள் பல அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் இவரை நடிக்க வைக்க தூண்டினர். இதனையடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘சினிமாவா? பந்தயமா?’ என்ற நிலை வந்த போது, பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அஜித்குமாரின் திரையுலக வாழ்க்கை:-

அஜித் குமார் 1991இல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான நிலையில் அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர், ஒரு வருட இடைவெளியினை அடுத்து, 1992இல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலேயே ‘சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. தமிழ்த் திரையுலகில் செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது முதல் தமிழ் படம் இதுவாகும். இதைனையடுத்து 1994இல் ‘பாசமலர்கள்’ ‘பவித்ரா, 1995இல் ‘ராஜாவின் பார்வையிலே, ‘ஆசை’ போன்ற படங்களில் நடித்தார். இதில், நடிகை சுவலட்சுமியுடன் இணைந்து நடித்த ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் , ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

அஜித்குமாரின் ஹிட் படங்கள்:-

தனது வசீகரமான தோற்றத்தாலும், இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜித் தொடர்ந்து 1996இல் ‘வான்மதி’ , ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’, ‘காதல் கோட்டை’, 1997இல் ‘நேசம்’, ‘ராசி’, ‘உல்லாசம்’, ‘பகைவன்’, ‘ரெட்டை ஜடை வயசு’, 1998இல் ‘காதல் மன்னன்’, ‘அவள் வருவாளா’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்), ‘உயிரோடு உயிராக’, 1999இல் ‘தொடரும்’, ‘உன்னை தேடி’, ‘வாலி’, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்), ‘அமர்க்களம்’, 2000இல் ‘முகவரி’ , ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘உன்னை கொடு என்னை தருவேன்’, ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ , 2001இல் ‘அசோகா’ (கௌரவ வேடம்), 2002 இல்; ‘ரெட்’, ‘ராஜா’, ‘வில்லன்’, 2003 இல் ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) , ‘ஆஞ்சநேயா’ , 2004இல் ‘ஜனா’ , ‘அட்டகாசம்’ ,2005இல் ‘ஜீ’, 2006 இல் ‘பரமசிவன்’, ‘திருப்பதி’, ‘வரலாறு’, 2007இல் ‘ஆழ்வார்’ , ‘கிரீடம்’, ‘பில்லா’, 2008 இல் ‘ஏகன்’, 2010 இல் ‘அசல்’, 2011 இல் ‘மங்காத்தா’, 2012இல் ‘பில்லா 2’, ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.

2013ஆம் ஆண்டில் ஆரம்பம் திரைப்படத்திலும், 2014ஆம் ஆண்டில் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ‘வீரம்’என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து 2015இல் இயக்குனர் கௌதம் மேனனின் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்பத்திலும் மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைந்து ‘வேதாளம் ’ என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

சிவா இயக்கத்தில் வெளியான ‘விவேகம் ’ திரைப்படத்தில் 2017 ஆவது ஆண்டில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மீண்டும் சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டில் ‘விசுவாசம்’; எனும் புதிய திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து இவர் நடித்திருந்ததை குறிப்பிடத்தக்கது.

அப்பா மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்கருவில் அஜித்குமார் மிக அற்புதமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இத்திரைப்படம் அஜித் குமார், சிவா கூட்டணியின் நான்காவது திரைப்படமாகும். ‘நேர் கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் அதே ஆண்டு இயக்குனர் ஹச் வினோத்தின் இயக்கத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் 2022ஆம் ஆண்டில் ஹச் வினோத்தின் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்தார். மீண்டும் ஹச் வினோத்தின் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படத்தில் இந்த ஆண்டு 2023 இல் நடித்தார்.

அஜித்குமாரின் தக்ஷா ட்ரோன்:-

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் ஆலோசனைப்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்; மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லாமல் பறக்கும் தக்ஷா ட்ரோன் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து பறந்து புதிய உலக சாதனை படைத்தது.

அஜித் தலைமையிலான மாணவ குழுவினர் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் அஜித்திற்கு பறக்கும் விமானங்கள் மீது விரும்பம் திரும்பி சிறிய ரக ஆள்லில்லா விமானங்களை தானே தயாரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளார். நடிகர் அஜித்குமார் தயாரித்த ட்ரோன் விமானங்கள் தமிழ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யூஏவி சேலஞ்ச் என்ற போட்டியில் கலந்து கொண்டனர். ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் ஆம்புலன்ஸ் போல அதே நேரத்தில் பல மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய வாகனத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

அண்ணா பல்கலை மாணவர்கள் இப்போட்டியில்; தேர்ச்சி பெற்றனர். உலகில் உள்ள ஏறத்தாழ 55 நாடுகளில் உள்ள மாணவர்கள் மட்டுமே இதில் தேர்ச்சி பெற்றனர் இதில் இந்திய மாணவர்களும் அடங்குவர். இதன் இறுதி போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாண்டில் இடம்பெற்றது. இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த போட்டியில் வித்தியாசமான சிந்தனை, நுட்பமான அறிவு கொண்டவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆகையால் இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பான ஆலேசகரை நியமிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நடிகர் அஜித்தை ஆலோசகராக நியமித்தது. இதனை அஜித் ஒப்பு கொண்டதையடுத்து அவர் மாணவர்களை வழிநடத்த ஆரம்பித்;தார். அம் மாணவ குழுவிற்கு டீம் தக்ஷா என பெயர் சூட்டினார். அஜித் தலைமையில் மாணவர்கள் பறக்கும் விமானத்தை தயார் செய்ய ஆரம்பித்தனர். இந்த போட்டியியின் நோக்கமே மெடிக்கல் சம்ந்தமான அந்த விமானம் செயல்பட வேண்டும் என்பதால் தொலை தூரம் மற்றும் நீண்ட நேரம் ஆளில்லாமல் பறக்கும் விமானத்தை அவர்கள் தயார் செய்ய வேண்டும். இதனையடுத்து அக்குழு சுமார் 10 கிலோ மீட்டர் வரை கட்டுப்பாட்டாளரின் தொடர்பிலேயே பறக்கும் மற்றும் 6 மணித்தியாலங்கள் மற்றும் 7 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் விமானத்தை வடிவமைத்து முடித்தனர். உலகில் இதுவரை இவ்வளவு நீண்ட நேரம் ஒரே பேட்டரியில் இயங்கும் விமானங்கள் இல்லை. இவர்களின் இந்த கண்டுபிடிப்பு தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

கல்லூரி நிர்வாகம் அஜித் மாணவர்களுக்கு அளித்து வரும் ஆலோசனைக்காக் மாணவர்கள்களை சந்திக்கும் ஒவ்வொரு நாளும், அவருக்க ரூ 1000 வித சம்பளமாக தர முன்வந்தது. ஆனால் அதை வாங்க மறுத்த் அஜித் அக் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்கு அந்த பணத்தை படிப்பிற்கான உதவி தொகையாக வழங்க கோரியுள்ளார்.

அஜித்குமாரின் விடாமுயற்சி:-

தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து கெட்டப்பை மாற்றியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம். அஜித் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘அசல் ’ திரைப்படத்தில் தான் கடைசியாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமாரின் பொதுநல சேவைகள்:-

இவர் ஏழை எளியோர், வசதிகளற்றோர் என பல்வேறு நபர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அதுமட்டுமன்றி பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை பார்த்த 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.

அஜித்குமாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்:-

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பாதுகாப்பான பயணத்தை மக்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.

அஜித்குமாரின் அறுவை சிகிச்சை:-

அஜித்குமார் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது இவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அஜித்குமாரின் பந்தய வாழ்க்கை:-

இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே கார் பந்தயம், பைக் பந்தயம் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், சென்னை, மும்பை, டில்லி போன்ற இடங்களில் நடந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச அரங்கில் இப்படிப்பட்ட பந்தயங்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், அதுமட்டுமன்றி பார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் அஜித் பெற்றுள்ளார். ஜேர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு பார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். 2010 ஆம் ஆண்டு பார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமாரின் இல்லற வாழ்க்கை:-

இவர் 1999 ஆம் ஆண்டில், இயக்குனர் சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடித்தபோது இவருடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், அவ்வருடமே ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒத்துக்கொண்டதால் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்கு பின்னர், ஷாலினி நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

அஜித்குமாரின் விருதுகள்:-

  • 1999இல் ‘வாலி’ படத்திற்காக பிலிம்பேர் விருதையும்,  2002இல் ‘வில்லன்’ படத்திற்காக பிலிம்பேர் விருதையும் 2006இல் ‘வரலாறு’ படத்திற்காக பிலிம்பேர் விருதையும், 2௦௦7இல் ‘பில்லா’ படத்திற்காக பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
  • 1999ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, ‘வாலி’ படத்திற்காகவும், 2001இல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.
  • 2௦௦1இல் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
  • 2006 இல் தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
  • 2006இல் விஜய் விருதுகளை ‘வரலாறு’, மற்றம் 2011இல் மங்காத்தா படத்திற்காகவும் மொத்தம் இரண்டு முறை பெற்றார்.
  • 2011 ஆம் ஆண்டில் ‘மங்காத்தா’ படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *