surya-kanguva-vadivasal-trending-viral

ரோலக்ஸ் சூர்யாவின் வாழ்கை வரலாறு

சூர்யா:-

தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் போது எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், ஒரு சிறப்பான நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் தான் நடிகர் சூர்யா. சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சினிமாவிற்காக தன் பெயரை சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.

இவர் பிரபல நடிகரான சிவகுமாரின் மகனும், நடிகர் கார்த்தியின் அண்ணனும், மற்றும் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். இவர் ஒரு படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தனது அற்புதமான நடிப்புத் திறனால் ரசிகர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று இருக்கின்றார். என்றால் அது மிகையல்ல. அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி கீழே தொடர்ந்து படிக்கவும்.

சூர்யாவின் பிறப்பு:-

1975ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடிகர் சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, பிறந்தார். இவருக்கு கார்த்தி, பிருந்தா என்ற சகோதர சகோதரியும் உள்ளனர். கார்த்தி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் வாழ்க்கையும், கல்வியும்:-

சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் தன்னுடைய பள்ளிக் கல்வியை தொடர்ந்த இவர், செயின்ட் பீட்ஸ் ஆங்கில இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். இதன் பின்னர் இவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தற்போதைய திரையுலகப் பிரபலங்களான விஜய், யுவன் ஷங்கர் ராஜா, விஷ்ணுவர்தன், கார்த்திக் ராஜா போன்றோர் அவரது கல்லூரி நண்பர்களாக இருந்தனர்.

சூர்யாவின் கால வாழ்க்கை:-

சிவகுமார் எப்போதும் நடிகரென்ற பெருமையோ, மமதையோ சிறிதளவும் இல்லாதவர் அவர் தன்னைப் போலவே தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்தார் என்பதற்கு சூர்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சூர்யா வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், ஆடை தயாரிப்புத் தொழிற்துறை மீது மிகுந்த ஆர்வமுடையவராகக் காணப்பட்டதால், தான் முன்னணி நடிகரின் மகனென்ற அங்கீகாரத்தை வெளிக்காட்டாமல், தொழிற்சாலை ஒன்றில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்தார். ஆறு மாதங்கள் அத்தொழிற்சாலையில் இவர் பணியாற்றிய பின் இயக்குனர் வசந்த், தனது அடுத்தப் படத்திற்கு சூர்யாவை ஒப்பந்தம் செய்யவே, அவ்வேலையில் இருந்து விலகிக் கொண்டார்.

சூர்யாவின் திரையுலக வாழ்க்கை:-

தமிழ்த் திரையுலகில் மணிரத்னத்தின் தயாரிப்பில் இயக்குனர் வசந்த்தின் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். நடிகர் விஜய்யுடன் இணைந்து 1997இல் இத்திரைப்படத்தில் நடித்தார், அதன் பின்னர், 1998இல் ‘காதலே நிம்மதி’, 1999இல் ‘சந்திப்போமா’, ‘பெரியண்ணா’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, 2000இல் ‘உயிரிலே கலந்தது’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.

இதனையடுத்து , அதே ஆண்டில் வெளியான ‘நந்தா’ படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்து, அவரை முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. இத்திரைப்படத்தில் இவர் மிக மிக சிறப்பான தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

‘நந்தா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கௌதம் மேனனின்காக்க காக்க’ திரைப்படம், அவரை ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் நெஞ்சங்களின் மனத்தில் பதித்தது. இத்திரைப்படத்தில் இவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக வாழ்ந்திருப்பார் என்றே கூறலாம். அந்நதளவிற்கு அவர் தனது கதாபாத்திரத்திரத்தோடு ஒன்றித்து நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் குறிப்பாக இவர் தனது நடை, உடை, பாவணை என அனைத்திலும் ஒரு விதமான கம்பீரமான தோற்றத்தை கையாண்டிருப்பார்

இதனையடுத்து கௌதம் மேனனனோடு மீண்டும் இணைந்து ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்திற்காக, உடற்பயிற்சி மூலமாகத் தனது எடையைக் குறைத்து, ‘சிக்ஸ் பேக்ஸ்’ என்ற உடலமைப்பைத் தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இத்திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது எனலாம். இதில் இவர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்திருப்பார்.

சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள்:-

2001 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் எனலாம்.

2002இல் ‘உன்னை நினைத்து’, ‘ஸ்ரீ’, ‘மௌனம் பேசியதே’, 2003இல் ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, 2004இல் ‘பேரழகன்’, ‘ஆய்த எழுத்து’, 2005இல் ‘மாயாவி’, ‘கஜினி’, ‘ஆறு’, 2006இல் ‘ஜூன் ஆர்’, ‘சில்லுனு ஒரு காதல்’, 2007இல் ‘வேல்’, 2008இல் ‘வாரணம் ஆயிரம்’, 2009இல் ‘அயன்’, ‘ஆதவன்’, 2010இல் ‘சிங்கம்’, 2011இல் ‘கோ’ , ‘அவன் இவன்’ போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

2011இல் ‘ஏழாம் அறிவு’, 2012இல் ‘மாற்றான்’ போன்ற படங்களில் நடித்து, வளர்ந்து வரும் ஹீரோக்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்தார். 2013இல் ‘சிங்கம் 2’, 2014இல் ‘அஞ்சான்’, 2015இல் ‘பசங்க 2’, 2016இல் ‘24’, 2017இல் ‘சிங்கம் 3’, 2018இல் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘கடைக்ககுட்டி சிங்கம்’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.

தொடர்ந்து 2019இல் ‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ போன்ற திரைப்படங்களிலும், 2020இல் ‘சூரரைப் போற்று’, 2021இல் ‘நவராசா’, ‘ஜெய் பீம்’, 2022 இல் ‘விக்ரம்’ ’படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருப்பார். அதில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். இன்று வரை நடிகர் சூர்யா எங்குச் சென்றாலும் மக்கள்  மத்தியில் ரோலக்ஸ் என்ற சத்தம் ஒளித்துக் கொண்டே இருக்கிறது.

சூர்யாவின் 2024 வெளிவரக்காத்திருக்கும் படங்கள்:-

தற்போது ‘கங்குவா ’ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ‘இரும்புக் கை மாயாவி’, ‘சூர்யா 34’, ‘அருவா’, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்று  எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இத்திரைரப்படங்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக சூர்யா:-

2012 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைக்கட்சியில் ஜனவரி மாதம் ஆரம்பமான கேம் ஷோவான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர் இந்த ஷோவை பிப்ரவரி 27 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் தொடங்கிய அதில், ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை, அவர் அதைத் தொகுத்து வழங்கினார்.

சூர்யா ஜோதிகா காதல் வயப்பட்ட தருணம் :-

பூவெல்லாம் கேட்டுப்பார்’,‘காக்க காக்க’, ‘உயிரிலே கலந்தது’, ‘மாயாவி’, ‘பேரழகன்’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்த போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட, பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்தனர். கடைசியில் அவர்கள் பச்சைக்கொடிக் காட்ட, 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்தனர். இத்தம்பதியர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

சூர்யாவின் பொது சேவை:-

சினிமாவில் வெற்றிகரமான நடிகர்கள் எப்போதும் ஒரு வரையறையை வைத்துக்கொண்டு அதற்கேற்பவே திரைப் பயணத்தை தகவமைப்பார்கள். அந்த வகையில், சூர்யா தேர்வு செய்தது அறம்.

சூர்யா ‘அகரம் பவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நலனுக்காகவும், பள்ளிப்படிப்பை இடையில் விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தன்னலமற்ற தொண்டாற்றி வருகிறார். மேலும், புலிகளைக் காக்கப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார், அதுமட்டுமன்றி காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வருகிறார். லாப நோக்கமற்ற அவரது தொண்டு நிறுவனத்தால், இதுவரை நூற்றுக் கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விச் செல்வம் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.

நடிகர் ஜெட்லீயின் ‘ஒன் பவுண்டேஷன்’ போல் அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே அகரம் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டதாய் குறிப்பிட்டிருக்கிறார் சூர்யா. கல்வி சார் சமூகப் பணி என்பது உதவிகள் மட்டுமே அல்ல என்பதை புதிய கல்வி கொள்கை என்பது ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்ற கருத்தை அழுத்தமாக உணர்த்தியவர் சூர்யா.

பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், தன் நிலைபாட்டில் இருந்து பின்வாங்காத சூர்யா, அது திரும்ப பெறப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறார். நடிப்பு மட்டுமன்றி, அறம் சார்ந்த பணிகளை நேர்த்தியுடன் மேற்கொண்டு வரும் அவரை ரசிக மனோபாவத்தை எல்லாம் கடந்தும் மக்கள் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சூர்யாவின் விருதுகள்:-

  • 2003இல் சிறந்த நடிகருக்கான ‘ITFA விருதை’, ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காகப் பெற்றார்.
  • 2003 இல் சிறந்த துணை நடிகருக்கான ‘பிலிம்பேர் விருது’, ‘பிதாமகன்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 2004 இல் சிறந்த நடிகருக்கான ‘பிலிம்பேர் விருது’, ‘பேரழகன்’ திரைப்படத்திற்காக வென்றார்.
  • 2008 இல் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘பிலிம்பேர் விருது’, ‘விஜய் விருது’, மற்றும் ‘ஆண்டின் ஸ்டைலிஷ் யூத் ஐகான்’ என்று சொல்லி, ‘சவுத் ஸ்கோப் விருது’ வழங்கப்பட்டது.
  • 2009இல் ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, ‘விஜய் விருதுகளை’, ‘அயன்’ மற்றும் ‘ஆதவன்’ திரைப்படங்களுக்காகப் பெற்றார்.
  • 2010இல் ‘சிங்கம்’ படத்திற்காக ‘பிக் FM’ மற்றும் ‘விஜய் விருது’ அவரை ‘என்டர்டைனர் ஆப் தி இயர்’ என்று அறிவித்து, விருதுகளை வழங்கியது.
  • 2012 இல் சிறந்த நடிகருக்கான ‘சினிமா விருதை’, ‘மாற்றான்’ திரைப்படத்திற்காக வென்றார்.
  • 2022ஆம் வருடம் சூரரைப் போற்று படத்திற்காக 68வது தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்

சூர்யா முதல் படத்தில் நடித்தபோது, அவருக்கு நடிக்கவே தெரியவில்லை, நடனம் வரவே இல்லை மொத்தத்தில் முக பாவங்களை காட்டத் தெரியவில்லை என்பன உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்தன.

வைரம் எப்போதும் பட்டை தீட்டத் தீட்டத்தான் மிளிரும் என்பதற்கேற்ப தான் எதிர்கொண்ட விமர்சனங்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி, தற்போது சூர்யா போல யாராலும் நடிக்க முடியாது என்ற பெயரை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறார்.

அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் கங்குவா படத்தின் காட்சிகளே இதற்கு சாட்சி.எப்போதும் ஒரு வட்டத்திற்குள் மட்டும் இன்றி அனைத்திலும் கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கும் சூரர்களை போற்றுவோம் என்பதற்கு சூர்யாவின் வாழ்க்கையும் ஒரு பாடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *