gautham-vasudev-menon-trending-dhruva-natchathiram-viral-post

இயக்குநர் GVM வாழ்க்கையில் நடந்த சம்பவம் காலப்போக்கில் கதையாக மாறியது

கௌதம் வாசுதேவ் மேனன்:-

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், மற்றும் நடிகர் ஆவார். இவர் தனது இயக்கத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளையும் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான 2001இல் மின்னலே , 2003இல் காக்க காக்க , 2008இல் வாரணம் ஆயிரம், 2010இல் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் 2006இல் வேட்டையாடு விளையாடு , 2015இல் என்னை அறிந்தால். சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வாரணம் ஆயிரம் திரைப்படமானது பெற்றது. இவர் தனது போட்டான் கதாசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான தங்க மீன்கள் திரைப்படம் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.

GVM ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:-

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் ஒரு மலையாளி தந்தைக்கும் ஒரு தமிழ்த் தாய்க்கும் மகனாக 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பிறந்தார். இவர் கேரளாவில் பிறந்தாலும் இவர் சிறுபராயம் முதல் வளர்ந்தது எல்லாம் சென்னை அண்ணா நகரில் தான். தனது பாடசாலை படிப்பை எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இதன் பின்னர் இவர் சென்னையின் புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். இவரது தந்தையார் 2007ஆம் ஆண்டு காலமானார்.

GVM திரைவாழ்க்கை:-

பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த சக மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு கௌதம் மேனன் வாரணம் ஆயிரம், மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களை எழுதினார்.

இவர் தன் சிறுவயது தொட்டு 1989இல் வெளிவந்த டெட் பொயட்ஸ் சொசைட்டி மற்றும் 1987இல் நாயகன் ஆகிய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டார். இவர் இயக்குனராக தனக்கு விருப்பம் என்பதை தன் பெற்றோரிடம் தெரியப்படுத்தினார். தாய் இவரை இயக்குநர் ராஜிவ் மேனனிடம் பயிற்சி பெற அறிவுறுத்தினார். 1997இல் வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அத்திரைப்படத்தில் இவர் ஒரு கௌரவ தோற்றத்திலும் நடித்தார்.

2000ஆம் ஆண்டு ஓ லாலா என்ற காதல் திரைப்படத்தை கௌதம் மேனன் ஆரம்பித்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாள மாறியதையடுத்து. தலைப்பானது மின்னலே என்று மாறியது. அந்நேரத்தில் அலைபாயுதே திரைப்படத்தில் நடித்து கன்னியர்களின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படம் உருவான விதம் பற்றி கௌதம் மேனன் கூறும் போது எடிட்டர் சுரேஷ் தவிர ஏனைய படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததால் தனக்கு இத்திரைப்படத்தை கையாளும் போது கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகர் மாதவன் இத்திரைப்படத்தின் கதையை தனது வழிகாட்டி மணிரத்னத்திடம் கூறுமாறு கௌதமிடம் கூற இது கௌதமுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. அலைபாயுதே திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடிக்கும் முடிவானது தனது திரைவாழ்க்கையில் நேர்மறையான முடிவாக இருக்குமா என தெரிந்துகொள்ள மாதவன் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். ஆரம்பத்தில் கௌதமுக்கு மணிரத்னத்திற்கு இக்கதையை கூறுவதில் தயக்கமாக இருந்தபோதும் மணிரத்னத்திடம் கதையைக் கூறினார். இக்கதையால் அவர் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. மாதவனுக்கும் அது தொடர்பில் சிறு வருத்தம் இருந்தாலும் திரைப்படத்தைத் தொடர மாதவன் ஒப்புக் கொண்டார். இத்திரைப்படத்தில் நடிகர் அப்பாஸ் மற்றும் அறிமுக நடிகையான ரீமா சென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். கௌதம்மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராக இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

2001 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று இத்திரைப்படம் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டது. தன் கல்லூரியில் படித்த சக மாணவன் (எதிரிக்கு) நிச்சயமான பெண்ணின் மீது காதல் வயப்படும் ஒரு இளைஞனைப் பற்றிய கதைதான் இந்த மின்னலே. இப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. அத்துடன் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் மிக மிக ஆர்வத்தை தூண்டக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான, தொழில்நுட்ப ரீதியாகவும் மிகச் சிறந்த திரைப்படமாக இருப்பதாக தி இந்து செய்தித்தாள் இத்திரைப்படத்தைப் பாராட்டியது.

மின்னலே திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதையடுத்து அத்திரைப்படத்தை இந்தியில் வெளியிட இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி கௌதமை ஒப்பந்தம் செய்தார். 2001ஆம் ஆண்டில் இத்திரைப்படம் ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் என்று பெயரிடப்பட்டு மாதவனுடன் தியா மிர்சா மற்றும் சயிப் அலி கான் ஆகியோர் இணைந்து நடித்தனர். முதலில் தயங்கிய கௌதம் பின்பு இயக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும் மின்னலே திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை மீண்டும் ஒப்பந்தம் செய்யும் கௌதமின் முடிவுக்குத் தயாரிப்பாளர் இணங்கவில்லை. இதனால் மின்னலே இந்திப் படத்திற்காக சில காட்சிகள் நீக்கப்பட்டு புதிதாக காட்சிகள் இணைக்கப்பட்டன. படம் எதிர்பார்த்ததை விட சராசரிக்கும் குறைவான அளவே வசூல் செய்தது. இத்திரைப்படத்தின் தோல்வி கௌதம் மேனனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளரின் தலையீடு காரணமாக மறுப்பதிப்பு செய்த திரைப்படமானது மின்னலே திரைப்படத்தின் எளிமைத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என கௌதம் கூறியதாகக் கூறப்பட்டது. இதன் பின்னர் இப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதன் காரணமாக இப்படம் பிரபலமடைந்தது.இந்தி பேசும் பார்வையாளரளான இளம் வயதினர் மத்தியில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

GVM காவல்துறை அதிகாரிகள் பற்றிய இரட்டை படங்கள்:-

2003 ஆம் ஆண்டு கௌதம் மேனன் காவல்துறை அதிகாரி பற்றிய யதார்த்தமான மற்றும் த்ரில்லர் படமாக காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா நடித்திருப்பார். மற்றும் இத்திரைப்படத்தில் ஜீவன் வில்லனாக நடித்திருப்பார். ஒரு காவல் அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கையை இத்திரைப்படம் மிக மிக சிறப்பாக காட்டியது. சமூக விரோதிகளால் அவரது வாழ்க்கை எவ்வாறு காணாமல் போனது என்பதை அப்படம் காட்டியிருக்கும். அக்காலத்தில் வெளியான தமிழ் படங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களை இத்திரைப்படம் தெளிவாக காட்டியது.

ஆரம்பத்தில் இத்திரைப்படத்தில் நடிக்க கௌதம் அஜித்குமார் , மாதவன், விக்ரம் ஆகியோரை அணுகினார். ஆனால் ஒரு காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் என்பதால் மூவருமே நடிக்க மறுத்துவிட்டனர். இத்திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா கௌதமிடம் கதாநாயகன் தாபாத்திரத்திற்கு சூர்யாவை பரிசீலிக்குமாறு கூறினார். சூர்யாவின் நடிப்பை நந்தா திரைப்படத்தில் பார்த்த பிறகு கௌதம் இறுதியாக அவரைத் தேர்வு செய்தார். இதில் நடிக்கும் நடிகர்களை வைத்து திரைக்கதையை ஒத்திகை பார்த்துக் கொண்ட கௌதம், படத்தை ஆரம்பிப்பதற்கு முன் சூர்யாவை ஒரு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். இத்திரைப்படம் வெளியானதையடுத்து. இத்திரைப்படத்தை கௌதமின் “திரைவாழ்க்கையில் ஒரு உச்சம்” என விமர்சகர்கள பாராட்டினர்.

2004ஆம் ஆண்டு இத்திரைப்படத்தை தெலுங்கு மொழியில் கர்ஷனா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். இதில் வெங்கடேஷ் அசின் மற்றும் சலீம் பய்க் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமன்றி மணிரத்னம் மற்றும் ராம் கோபால் வர்மா ஆகிய இயக்குநர்களுடன் கௌதமை ஒப்பிட்டனர்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியானது. ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி , பிரகாஷ் ராஜ்மற்றும் சலீம் பய்க் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயத்தை இத்திரைப்படம் மூலமும் இவர் வெளிச்சமாக காட்டியிருப்பார்.

கௌதமுக்கு தமிழ் திரையுலகில் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக இத்திரைப்படம் அமைந்தது. கௌதமின் இயக்கம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இவரது அடுத்த திரைப்படம் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்பதாகும் இது ஜேம்ஸ் சீகல் எழுதிய டீரெயில்ட் நாவலை அடிப்படையாக கொண்ட கதைக்கருவாகும். இத்திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது தயாரிக்கப்பட ஒரு ஆண்டுக்கு மேல் எடுத்துக் கொண்டது. திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஒரு விமர்சகர், இத்திரைப்படத்தை விமர்சிக்கும் போது கௌதம் “ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் வெகுவாக வளர்ந்து வருகிறார். பார்வை தெளிவானது, இவரது பாணி தனித்துவமானது, இவரது குழு இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. ஒவ்வொரு தடவையும்; இவர் வெற்றி பெறுகிறார்” என்று விமர்சித்திருந்தார்.

சூர்யாவுடன் மீண்டும் 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம். இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடமேற்று நடித்தார். ஒரு தந்தை தன் மகன் வாழ்வில் எவ்வாறு ஹீரோவாக உத்வேகமாக திகழ்கிறார் என்ற கருவை இத்திரைப்படம் மிகத்தெளிவாக விளக்கியது. இத்திரைப்படத்தை 2007 ஆம் ஆண்டு இறந்த தன் தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கௌதம் கூறினார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளரானார். இத்திரைப்படத்தில் இறந்த தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக கதையில் குடும்பம்த்தின் முக்கியத்தை சேர்த்திருந்தார்.

சூர்யா இத்திரைப்படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கடினமாக உழைத்தார். சுமார் இரு வருடங்களுக்கு மேலாக இத்திரைப்படத்தின் தயாரிப்பானது நீடித்தது. வெளியாகிய பின் இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. தரமான படம் என பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 22 கோடி ரூபாய் வசூல் செய்தது. கௌதமின் திரைப்படங்களிலேயே அதிக பாராட்டுக்களை பெற்றது இத்திரைப்படம் தான். சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது, 5 பிலிம்பேர் விருதுகள், 9 விஜய் விருதுகள் மற்றும் ஆகியவற்றை 2008 ஆம் ஆண்டு இப்படம் பெற்றது.

இதனைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் திரும்பவும் காதல் திரைப்படங்களை கௌதம் இயக்க ஆரம்பித்தார். இதில் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதன் பின்னர் 2011இல் உளவியல் கதையான நடுநிசி நாய்கள் என்ற படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதில் கௌதமின் இணை இயக்குநர் மற்றும் புதுமுகம் வீரபாகு , நடிகை சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவங்களை இத்திரைப்படம் அடிப்படையாகக் கொண்டது

2012இல் நீ தானே என் பொன்வசந்தம் தமிழிலும் மற்றும் எதோ வெள்ளிபோயிந்தி மனசு தெலுங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இரு திரைப்படங்களும் கௌதமின் போட்டான் கதாஸ் நிறுவனத்தால் இணை தயாரிப்பு செய்யப்பட்டன. ஜீவாவுடன் இணைந்து நானி ஆகியோர் முறையே தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களாக நடித்தனர். இவ்விரு பதிப்புகளிலும் நடிகை சமந்தா முன்னணி நடிகையாக நடித்தார். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றினார். இப்படம் இருவரின் வாழ்வில் மூன்று நிலைகளை; கதையாக கூறியது.

பொலிஸ் அதிகாரிகளின் கதாபாத்திரங்களை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்க கௌதம் முடிவெடுத்திருந்த நிலையில் இறுதியாக விக்ரமை கதாநாயகனாக வைத்து மூன்றாவது திரைப்படத்தை இயக்க முடிவெடுத்திருந்தார். ஆனால் அஜித்தை கதாநாயகனாக வைத்து என்னை அறிந்தால் திரைப்படத்தை 2015ஆம் ஆண்டு முடித்தார்.

GVM குடும்ப வாழ்க்கை:-

கௌதம பிரீத்தி என்பவருடன் இல்லறத்தில் இணைந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆடை வடிவமைப்பாளரான உத்தரா மேனன் இவரது தங்கை ஆவார். 2015இல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு கௌதமின் படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *