மனோரமா:-
மனோரமா தென்னிந்தியத் திரைப்படத்துறையில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். உலகெங்கும் உள்ள தமிழ் ரசிர்கள் மற்றும் திரையுலகினரால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார். இந்திய திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைகளை தன்னகத்தே கொண்டவர். மு.கருணாநிதி , கா.ந.அண்ணாதுரை, ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா , ம.கோ.இராமச்சந்திரன் இவர்களுடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு படங்களில் என்.டி.ராமராவ் இவருடன் நடித்திருக்கிறார்.
மனோரமா ஆரம்பகால வாழ்க்கை:-
1943 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தை காசி கிளார்க்குடையாருக்கும், ராமாமிர்தம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோபிசாந்தா என்பதாகும்.
இவர் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். மனோரம்மாவின் தந்தை காசியப்பன் தாயார் ராமாமிர்தம் அவர்களின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்ததால் கணவருடன் ஏற்பட்ட மனகசப்பால் புறக்கணிக்கப்பட்ட ராமாமிர்தம் அம்மாள் மனோரமவை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார்.
இவர் மனோரமாவை ஆறாம் ஆம் வகுப்பு வரை படிக்கவைத்தார். குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்குள்ள செட்டியார் வீடுகளில் வீட்டு வேலை செய்தும் தாயாருடன் பலகார வியாபாரம் செய்தும் தங்கள் வாழ்க்கையை படிப்படியாக ஆரம்பித்தார்கள்.
மனோரமா தொழில்:-
இவர் தனது பனிரெண்டாவது வயதினில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் , நாடக இயக்குனர் திருவேங்கடம் ஆகிய இருவரும் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.
இவர் தமிழ் சினிமாவிற்கு வருமுன் “வைரம் நாடக சபா” போன்ற நாடகத்தில் சிறு வேடங்களில் நடித்து வந்தார் மனோரமா. எஸ்.எஸ்.ராஜேந்திரன் புதுக்கோட்டையில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது மனோரமாவை பி.ஏ.குமார் என்பவர் இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மனோரமாவின் திறமையை கண்டு கொண்ட ராஜேந்திரன் தனது நாடக மன்றமான “எஸ்.எஸ்.ஆர். மன்றத்தில்” சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் தலைமையின் கீழ் தென்பாண்டிவீரன், மணிமகுடம், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.
மனோரமா திரையுலக பயணம்:-
முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக ஆச்சி மனோரமா நடித்திருந்தார். இதன் பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. இதனையடுத்து எம்.ஆர்.ராதா தனது நாடக சபாவில் நடத்திவந்த ஒரு நாடகத்தை அவரது தம்பியான எம்.ஆர்.பாப்பாவுடன் சேர்ந்து படமாக தயாரித்து அதில் ஒரு முக்கிய வேடத்தில் மனோரமா நடித்தார். அந்த திரைப்படமும் பாதியில் நின்றுபோக இறுதியாக கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்த திரைப்படமான மாலையிட்ட மங்கை என்ற திரைப்படமே மனோரமாவின் முதல் திரைப்படமாக அமைந்தது.
மனோரமா கலையுலக வெற்றிப் பயணம்:-
தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘கொஞ்சும் குமரி’ , ‘களத்தூர் கண்ணம்மா’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘அன்பே வா’, ‘திருவிளையாடல்’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘ஆயிரம் பொய்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் 1958 ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த அவர், இன்று வரை சுமார் 1000ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துளளதுடன் ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன் பெயரை பதிவு செய்து, மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். தமிழ், ஹிந்தி , மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்களான ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘வா வாத்தியாரே’, ‘தியாகியின் மகன்’, ‘அன்புள்ள அம்மா’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘டீனா மீனா’ என்பவற்றுலும் நடித்துள்ளார்.
1965 ஆம் ஆண்டில் வல்லவனுக்கு வல்லவன் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. நாகேசுடனான அவரது திரை ஜோடி 1960-69களில் மிகவும் பிரபலமானது, பின்னர் 1970 கள் மற்றும் 80 களில் சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி , தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் போன்ற நடிகர்களோடு நடித்தார்.
மனோரமா நடித்த சில திரைப்படங்கள்:-
‘கொஞ்சும் குமரி’, ‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’,‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’,‘முத்துக் காளை’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘இந்தியன்’,‘எஜமான்’, ‘மறுமலர்ச்சி’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘புதிய பாதை’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’ , ‘பாண்டவர் பூமி’.
மனோரமா பாடிய பின்னணி பாடல்கள்:-
இவர் தனது நடிப்பில் வெளியான 300 தமிழ் பாடல்களுக்கு திரைப்படங்களில் பின்னணி பாடினார். ஜி.கே. வெங்கடேஷ் இசையமைக்க சமத்து என்னும் திரைப்படத்தில மகளே உன் என்ற பாடலே அவர் பாடிய முதல் பாடலாகும். படத்தின் தயாரிப்பாளர் பி.ஏ. குமார் மூலமாக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . 1970ஆம் ஆண்டு தர்ஷினம் என்ற படத்தில் டி.எம்.சௌந்தரராஜனுடன் கிளாசிக்கல் அடிப்படையிலான பாடலைப் பாடியுள்ளார். அத்துடன் மனோரமா எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து “தாத்தா தாத்தா பிடி குடு” என்ற பாடலைப் பாடினார். அவர் திரைவாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப்பாடலாக சோவுடன் தான் நடித்து வெளியான பொம்மலாட்டம், திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.குமார் இசையில் வா வாத்தியாரே ஊட்டான்டே என்ற பாடலாகும். மேலும் அவர் எம்.எஸ்.விஸ்வநாதன் , ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பாடியுள்ளார்.
நான் எனது துறையில் நகைச்சுவையாளினியாக முடிவு எடுத்து, கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் “. ஆகின்றன.
1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் எப்படி நடிக்க முடிந்தது என்று கேட்டபோது, “நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நபர் என்று நம்புகிறேன். கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல், நான் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் நடந்தவற்றை நீங்கள் நம்ப மாட்டீர்கள், எனக்கு இன்னும் செயற்பட வேண்டும் என்ற வெறி இருக்கிறது. என் வெற்றிக்கு காரணமான ஒருவர் என் அம்மா மட்டுமே . என் அம்மா அவர் வாழ்க்கையில் எனக்காக எல்லாவற்றையும் செய்தார், இப்போது அவர் என்னுடன் இல்லை. என் வாழ்க்கையில் நான் எதைச் சாதித்தாலும் அது அவரால் தான். ” என்றார்.
மனோரமாவின் தனிப்பட்ட வாழ்க்கை:-
எஸ். எம். ராமநாதன் சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்து கொண்டிருந்த பொழுது, மனோரமாவைக் காதலித்தார். அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
மனோரமாவின் விருதுகளும், மரியாதைகளும்:-
- தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
- 1988இல் ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
- 2002இல் மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
- உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக இடம்பெற்றுள்ளார்.
- டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருதை மலேசிய அரசிடம் இருந்து பெற்றுள்ளார்.
- கேரளா அரசின் கலா சாகர் விருதை பெற்றுள்ளார்.
- சினிமா எக்ஸ்பிரஸ் விருதை பெற்றுள்ளார்.
- சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.
மனோரமாவின் மறைவு:-
மனோரமா 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 78.
அஞ்சலி:-
தமிழகும் முழுவரும் மனோரமாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தது. அத்துடன் அவருக்கு மாநிலம் முழுவதும் மற்றும் சமூக ஊடகங்களில் ஏராளமான அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.நகரில் உள்ள மனோரம்மாவின் வீட்டிற்கு நேரடியாக சென்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரின் உடலிற்கு மாலை அணிவித்தார், மேலும் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் ” மனோரமாவைப் போன்ற சாதனை புரிந்தவர்கள் தமிழ் திரைப்பட உலகில் யாரும் இல்லை, இனிமேலும் யாரும் இருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.
அதுமமட்டுமன்றி அவரது மரணம் குறித்து நான் அதிர்ச்சியடைந்தேன், மனோரமா எனக்கு எப்போதும் ஒரு மூத்த சகோதரி. அவர் என்னை எப்போதும் அம்மு என்று அழைக்கும் போது நான் அவரை மனோரமா என்று அழைத்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவரை நடிகையர் திலகம் என்று குறிப்பிட்டார். மேலும் மனோரமாக்கு நடிகைக்கு மரியாதை செலுத்த ஏனைய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜித் குமார், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்.சரத்குமார், கி.வீரமணி, கார்த்திக், ஜி.கே.வாசன், டெல்லி கணேஷ் ,இளையராஜா, வைரமுத்து, எஸ்.சேகர், விஜய்குமார், கவுண்டமணி, கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், ராதிகா , விமல் , சிலம்பரசன் விக்ரமன், எஸ்.தானு, டி.ராஜேந்தர் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சினிமா உலகில், நடிகர்கள் மட்டும் தான் நகைச்சுவையிலும் சிறப்பாக நடிப்பார்கள் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் நகைச்சுவையில் சாதனை படைக்க முடியும் என்று நிரூபித்தவர். குறிப்பாக சினிமாவில் குணச்சித்திரம் , நகைச்சுவை என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் ஆரம்பித்து, அன்றைய எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைய தலைமுறை வரை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது