
தனுஷ் நடித்துள்ள வாத்தி டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் வாத்தி. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாக சூர்யர்தேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சமுத்திரக்கனி, பம்மி சாய், சாய் குமார், ஹைபர் ஆடி, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த 4 ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இந்த நிலையில், வாத்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இதில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த டிரைலரை பார்க்கும் போது சமுத்திரக்கனி தான் வில்லன் என்று தெரிகிறது. அதோடு அரசுப் பள்ளியை தனியார் பள்ளியோடு சேர்த்து, கல்வியை வியாபாரமாக்கும் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. தனியார் பள்ளியில் இருக்கும் தனுசு, சமுத்திரக்கனியின் கூற்றுப்படி அரசுப் பள்ளிக்கு வருகிறார். அங்கு, உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் சம்யுக்தா மேனனை காதலிக்கிறார். ஒரு புறம் கல்வியை வியாபாரமாக்கும் சமுத்திரக்கனியின் வில்லத்தனம் மற்றொரு புறம் சம்யுக்தாவின் காதல் காட்சி என்று கலக்கியிருக்கிறார் தனுஷ்.

கல்வியில் கிடைக்கும் காசு, அரசியலில் கிடைக்காது என்று சமுத்திரக்கனி வில்லத்தனம் காண்போரை வியக்க வைக்கிறது. ஆனால், இது போன்று பல படங்கள் நம் கண் முன்னே வந்து செல்கிறது. இருந்தாலும் தனுஷ் இந்தப் படத்தில் எப்படி தன்னை வாத்தியாராக காட்டியிருக்கிறார் என்று படம் வெளியான பிறகே தான் தெரியவரும். வரும் 17 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக செல்வராகவனின் பகாசூரன் படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.