
லவ் டுடே படம் வெளியாகி 100 நாட்கள் ஆன நிலையில், காதலர் தினத்தில் விழா எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படம் லவ் டுடே. கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா, ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, அக்ஷய உதயகுமார் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் இந்தப் படத்தை தயாரித்திருந்தனர்.
முழுக்க முழுக்க காதல் காட்சியையும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான கதையையும் மையப்படுத்திய காதலர்கள் இருவரும் தங்களது செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மாமாகுட்டி பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானது. அதோடு, சாச்சிட்டாலே, என்னை விட்டு, பச்ச இலை என்று ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை வியக்க வைத்தது. அதுமட்டுமின்றி இந்த பாடல்கள் அனைத்திற்கும் பிரதீப் ரங்கநாதன் தான் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
Also Read – AK62 அப்டேட்: மார்ச்சில் படப்பிடிப்பு தொடக்கம்?
கிட்டத்தட்ட ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்ததாக விக்கிப்பீடியா தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், இந்தப் படம் வெளியாகி வரும் 12 ஆம் தேதி உடன் 100 நாட்கள் ஆகிறது. இதன் காரணமாக ஏஜிஎஸ் நிறுவனம் வெற்றிவிழா கொண்டாட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு, வரும் 14 ஆம் தேதி காதலர் தினம் என்பதால், இந்தப் படத்தின் பெயர் லவ் டுடே என்பதாலும் அன்று இரவு பிரமாண்டமாக நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
லவ் டுடே 100ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து கேடயம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.