
அஜித் மீண்டும் ஆக்ஷன் த்ரில்லர் நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நெர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான 3ஆவது படம் துணிவு. முழுக்க முழுக்க வங்கி கொள்ளையை மையபடுத்திய இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட்டது.
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. திரையரங்கைத் தொடர்ந்து இந்தப் படம் நேற்று நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரோடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் அஜித் தனது 62 ஆவது படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகினார்.
இவரைத் தொடர்ந்து அனிருத்தும் விலகியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், முன் தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீகாமன், தடம், கழக தலைவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்துக்கு கதை சொல்லியதாகவும் அந்த கதை அஜித்திற்கு பிடித்துப் போக இந்தக் கதையை அவர் ஓகே சொல்லியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி லைகா புரோடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனையும் அஜித் லண்டனிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து, சுபாஷ்கரன், மகிழ் திருமேனி, தமிழ் குமரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏகே62 அதான் அஜித் நடிக்கும் 62ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
