
பாகுபலி நடிகருக்கும், பாலிவுட் நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் என்று தகவல் வெளியாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். அதுமட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் கூட. சமீபத்தில் கூட தனது சம்பளத்தை ரூ.100 கோடி வரை உயர்த்தியதாக தகவல் வெளியானது. இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஈஸ்வர் என்ற படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ராகவேந்திரா, வர்ஷம், அடவி ரமுடு, சக்ரம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி என்று ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.
ஆனால், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் திரைக்கு வந்த வரலாற்று சிறப்பு மிக்க படமான பாகுபலி படமே பேரும், புகழும் கொடுத்தது. சினிமாவின் உச்சகட்டத்திற்கே இவரை கொண்டு சென்றது. கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.600 கோடிக்கும் அதிகமாகவே வசூல் அள்ளியதாக சொல்லப்படுகிறது. அப்போது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன் பிறகு பாகுபலி 2 படமும் வெளியானது. இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக விக்கிபீடியா தகவல் தெரிவிக்கின்றது.

அப்போதும் கூட அனுஷ்கா, பிரபாஸ் தொடர்பான காதல் மற்றும் திருமணம் தொடர்பாக செய்தி வெளியானது. எனினும், இது குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. அதோடு, அடிக்கடி இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் சென்றும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால், இருவருமே இதனை மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் தான், பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பலரும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டும் வருகின்றனர். இவ்வளவு ஏன், திரைப்பட விமர்சகர் உமர் சந்த தனது டுவிட்டர் பக்கத்தில், பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த வாரம் மாலத்தீவில் வைத்து நடக்க இருப்பதாக பிரேக்கிங் செய்தியாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் இருவரும் ஆதிபுரூஷ் என்ற ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் ஓம் ரௌட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிபுரூஷ் படம் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் மூலமாகவே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.