
பாரதி கண்ணம்மா 2 இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தொலைக்காட்சி என்றாலே சீரியல்கள் தான். திங்கள் முதல் வெள்ளி வரையோ அல்லது சனிக்கிழமை வரையிலோ வாரம் முழுவதும் காலை முதல் இரவு வரையில் சீரியல்கள் தான் ஒளிபரப்பாகிறது. தினந்தோறும் நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரது குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தான் விதவிதமாக சீரியல்களில் கொண்டு வருகிறார்கள். எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்களுக்கு தான் அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. சீரியல்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களுக்கும் முக்கியத்தும் கொடுக்கப்படும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான்.
இந்த தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி ஒளிபரப்பான சீரியல் பாரதி கண்ணம்மா. இதில், ரோஷினி ஹரிபிரியன், அருண் பிரசாத், ரக்ஷா ஷ்யாம், ஃபரினா ஆசாத், ரூபா ஸ்ரீ, காவ்யா அறிவுமணி, தீபா சங்கர், ரேகா, எம் ஜே ஸ்ரீராம், வாசு விக்ரம், சோனா நாயர், ரிஷி கேசவ், கண்மணி மனோகரன், வெங்கடேஷ், செந்திகுமாரி, ராஜூ ஜெயமோகன், ஆல்ய மானசா, நீபா, ரேவதி, பிரவீன் தேவசகாயம் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 4 ஆம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
கருத்தமுத்து என்ற மலையாளம் தொடரின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்று வந்த இந்த பாரதி கண்ணம்மா சீரியல் 1100 எபிசோடுகள் வரையில் மக்களோடு பயணித்துள்ளது. இந்த சீரியலில் நடித்த பிரபலங்கள் வெளியுலகிலும் அதே கதாபாத்திரங்களாகவே மக்களோடு மக்களாக ஒன்றிவிட்டார்கள். இந்த சீரியலின் மிகப்பெரிய மாஸ் சீன் என்னவென்றால், ரோஷினி நடித்த பேக் தூக்கிக் கொண்டு நடக்கும் காட்சி தான். இந்த சீன் பட்டி தொட்டியெங்கும் பரவி, மீம்ஸ் உருவாகும் அளவிற்கு வந்தது.

இப்படிப்பட்ட இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த 4 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலின் 2ஆம் பாகம் புதிய அத்தியாயத்தை இன்று தொடங்குகிறது. பாரதி கண்ணம்மா 2 என்ற இந்த சீரியல் இன்று இரவு 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் தொடங்குகிறது. இதற்கான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் கோயிலில் வைத்து பாரதியாக உருவெடுக்கும் சிப்பு சூரியனுக்கு பரிவட்டம் கட்டுவது போன்றும், மற்றொருபுறம் கண்ணம்மாவாக வலம் வரும் வினுஷா தேவி பெயரில் அர்ச்சனை செய்வது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இவர்களுடன் ரூபா ஸ்ரீ, தீபா சங்கர் ஆகியோர் துணை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர். இந்த சீரியல் இன்று இரவு 9 மணிக்கு தனது முதல் எபிசோடை மக்கள் மத்தியில் வெளிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.