
நடிகர்கள் வெறும் நடிகர்கள் தான் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தனுஷின் பொல்லாதவன் படம் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் வெற்றிமாறன். அதன் பிறகு ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை தனுஷை வைத்தே இயக்கி வெற்றி கொடுத்துள்ளார். தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
தற்போது சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன், நடிகர்களை தலைவர்கள் என்று அழைப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர் அளவிற்கு யாருக்கும், எந்த நடிகருக்கும் ரசிகர்கள் இருந்தது கிடையாது என்று எல்லோருமே சொல்வார்கள். ஒரு நடிகராக மட்டுமின்றி நாட்டையும் ஆட்சி செய்திருக்கிறார்.
ஆதலால், அவர்களை தலைவர் என்று சொல்வது சரியாக இருந்தது. இப்போதுள்ள நடிகர்களை ஏன், அவ்வாறு சொல்ல வேண்டும். நடிகர்கள் வெறும் நடிகர்கள் தான். அவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டும். அவர்களை தலைவர் என்று அழைப்பது வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.