
லியோ படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். காலம் நேரம் பாத்து அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அவரது மக்கள் இயக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி வருகிறது. இது இருக்கட்டும், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தளபதி விஜய் தொடர்பான அப்டேட் தான் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது.
மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – விஜய் காம்பினேஷனில் உருவாகி வரும் 2ஆவது படம் லியோ. விஜய்யின் 67ஆவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தளபதி விஜய் படக்குழுவினர் கிட்டத்தட்ட 180 பேருடன் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு லியோ படத்தின் 2ஆவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், சண்டை மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

முழுக்க முழ்க்க ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மிஷ்கின் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இது தவிர கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் ஏஜெண்ட் டீனா ஆகியோர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தளபதி67 படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் ரிலீஸ் தொடர்பான புரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், லியோ என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, ஒரே ஆண்டில் விஜய் வெளியிடும் 2ஆவது படம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு படம் வெளியானது.

கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் ஒரே ஆண்டில் 2 படங்களை வெளியிட்டிருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பைரவா படம் வெளியானது. அதே போன்று, கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெர்சல் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதே டெக்னிக்கை பாலோ பண்ணி ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 2 படங்களை கொடுக்கிறார். ஏற்கனவே வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகிவிட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சரஸ்வதி, விஜயதசமியை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.