
தனுஷ் நீ வச்ச குறி தப்பாது, உலகத்தை சுருட்டி கைல வச்சுருக்க என்று பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் வாத்தி. வரும் 17 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில், படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா, இயக்குநர் வெங்கி அட்லூரி, சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, ஜிவி பிரகாஷ், பாரதிராஜா, தயாரிப்பாளர் வம்சி, கென் கருணாஸ் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது: தனுஷ் அன்பில் பொல்லாதவன், ஏமாற்றத்தை படிக்காதவன், ஒழுக்கத்தில் வாத்தி, நடிப்பில் அசுரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் கூறியிருப்பதாவது: நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று எனக்கு தெரியாது. ஆனால், தனுஷ் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான். ஏனென்றால் நான் ஆடுகளம் மற்றும் அசுரன் என்று 2 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்த இரு படங்களுக்குமே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரு படங்களுக்கு இசையமைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கென் கருணாஸ் கூறியிருப்பதாவது: திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். வாத்தி படத்திலும் உதவி இயக்குநராக சென்றேன். தனுஷ் என்னிடம் வந்து, உனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவர் சொன்னது போன்றே இயக்குநர் என்னை கூப்பிட்டு நடிக்க வைத்தார். என்னைப் பொறுத்தவரையில் நடிப்பிலும் சரி, இயக்கத்திலும் சரி என்னுடைய வாத்தி எப்போதும் தனுஷ் தான். வாத்தி படத்தில் தமிழ் ம்ற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு ஒரு சீன் எடுப்பாங்க. தெலுங்குல சீன எடுக்கும் போது தான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். சம்யுக்தா தான் என்னுடைய கிரஷ். பள்ளிப் பருவத்தில் ஒவ்வொருவருக்கு எப்படி கிரஷ் இருக்கிறதோ அதே போன்று தான் வாத்தி படத்தில் எனக்கு அவர் மீது கிரஷ் இருந்தது என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா தனக்கே உரிய பாணியில் கூறியிருப்பதாவது: என் இனிய தமிழ் மக்களே…. என் இனிய தமிழ் மகன் வேஷ்டி சட்டையோடு வந்திருக்கிறான். ஐ லவ் ஹிம்…கடவுளின் குழந்தை தனுஷ்… நான் 100 கலைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தவன். அவரது பெற்றோருக்கு எனது நன்றி. தனுஷ் நீ மிரட்டிட டா நீ ஜெயிப்ப. நீ வச்ச குறி தப்பாது. உலகத்தை சுருட்டி கைல வச்சுருக்க. நம்ம பையன் எவனாச்சும் ஹாலிவுட் போயிருக்கானா. ஜி.வி. பிரகாஷ் என் புள்ள பாடல்கள் போட்டு இருக்கான் பாரு அய்யோ” என்று கூறியுள்ளார்.

தனுஷ் கூறியிருப்பதாவது: 1990 ஆம் ஆண்டுகளில் நடக்க கூடிய கதை இது. இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தது. ஆசிரியர்கள் தான் நம் தலையெழுத்தை மாற்றக் கூடியவர்கள். லாக்டவுனில் தான் வெங்கி அட்லூரி இந்த கதையை சொன்னார். நான் அப்போது வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன். சொல்லும் கதையை எப்படியாவது மறுத்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், கதையை கேட்டதுமே, எனக்கு பிடித்துவிட்டது. அவரிடம் எப்போது கால்ஷீட் வேண்டும் என்று தான் நான் கேட்டேன். வடசென்னை 2 பற்றி வெற்றிமாறன் ஆபிஸ்ல தான் கேளுங்க. எப்போது நடக்கும் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக நடக்கும். என்று கூறியுள்ளார்.
சமுத்திரக்கனி இப்போதெல்லாம் 4 பக்க வசனத்தையும் சரளமாக பேசி விடுகிறார். ஜிவி பிரகாஷ் கோல்டன் பார்மில் இருக்கிறார். தொடர்ந்து பாடல்கள் எழுதிக் கொண்டே இருங்கள். அதனை பத்திரமாக லைப்ரேரியில் போட்டு வையுங்கள். நாம் தான் இப்போதெல்லாம் சேர்ந்தே தான் படம் செய்கிறோம். அது உங்களுக்கும் பிளஸ், எனக்கும் பிளஸ். எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு தான் மிகவும் முக்கியம். எண்ணம் போல் தான் வாழ்க்கை. உங்களுடைய எண்ணத்தை எப்போதும் படிப்பில் வைத்தால் அது உங்களைக் காப்பாற்றும் என்று கூறியுள்ளார். இறுதியாக எனது வண்டிக்கு பின்னால் யாரும் வர வேண்டாம். உங்களது பெற்றோர்கள் உங்களை நம்பி படிக்க வைக்கிறார்கள். எனது வண்டி வரும் போது நீங்கள் என்னை பின் தொடர்ந்து வருகிறீர்கள். அப்படி எல்லாம் செல்லக் கூடாது என்று தனுஷ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.