
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மாளவிகா மோகன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். முழுக்க முழுக்க மாறுபட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். அதுவும், நீண்ட தாடி, வேஷ்டி மட்டுமே அணிந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து, பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட அதர்வா நடித்த பரதேசி படம் போன்று இந்தப் படம் உருவாகிறது.
ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலமாக கே இ ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாளவிகா மோகனன் விமான நிலையம் வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தங்கலான் படத்தை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய தமிழ் படங்களில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். ஆனால், எந்தப் படத்திலேயும் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. மாஸ்டர் படத்தில் விஜய் தான் ஒன் மேன் ஆர்மியாக வலம் வந்தார். அவ்வப்போது ஒரு சில சீன்களில் மட்டும் மாளவிகா மோகனன் வலம் வந்தார். ஆகையால், தங்கலான் படம் மாளவிகா மோகனனுக்கு சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
