
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திற்கான புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி, நிவேதிதா சதீஷ், விஜி சந்திரசேகர், பிந்து, பால சரவணன் என்று பலர் நடிக்கின்றனர். சந்தீப் கிஷன் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்திற்உ ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேப்டன் மில்லர் படத்திற்கான பூஜை நடந்துள்ளது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 1930 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் நடந்த கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. அதற்காகவே தனுஷ் முறுக்கு மீசை தாடியுடன் அதிகளவில் முடி வளர்த்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். கேப்டன் மில்லர் படத்திற்கான கெட்டப்போடு தனுஷ் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை புரிந்துள்ளார். அவருடன் இணைந்து அவரது இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் வந்துள்ளனர்.

மேலும், இயக்குநர் பாரதிராஜா, சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ் என்று பலரும் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ளது.

வா வாத்தி பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். நாடோடி மன்னன் பாடலை அந்தோனி தாசன் பாடியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். கலங்குதே பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் கொடுத்துள்ளார். ஒன் லைஃப் பாடலை ஸ்டீபன் ஷெரையா மற்றும் அறிவு பாடியுள்ளனர். தனுஷ் மற்றும் அறிவு பாடல் வரிகள் அமைத்துள்ளனர். சூரிய பறவைகளே என்ற பாடலை திப்பு மற்றும் ரவி ஜி பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். வரும் 17 ஆம் தேதி வாத்தி படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.