
நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த 1955 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி பிறந்தவர் டி.பி.கஜேந்திரன் (68). கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தூத்துக்குடி பெருமாள் மற்றும் டி.பி.முத்துலட்சுமியின் மகன். இவரது அண்ணி தான் இவரது வளர்ச்சிக்கு உதவியுள்ளார். கே பாலசந்தர் மற்றும் விசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். மூன்றே ஆண்டுகளில் தன்னாலும் ஒரு படம் இயக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். 1988 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வீடு மனைவி மக்கள் என்ற புதிய படம் வெளியானது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு மாப்பிள்ளை, நல்ல காலம் பொறந்தாச்சு, பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்மநாதன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா, மகனே என் மருமகனே என்று பல படங்களை இயக்கியிருக்கிறார். பெரும்பாலும், காமெடி படமாக அமைந்தன. எல்லா படங்களும் சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டி.பி. கஜேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
