
சர்கார், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களின் வசூல் சாதனையை வாரிசு படம் முறியடித்துள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இயக்குநர் வம்சி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், பிரபு, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீமன், விடிவி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், யோகி பாபு, சம்யுக்தா, ஷாம் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். தில் ராஜூ இந்தப் படத்தை தயாரித்திருந்தார். முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.
என்னதான் துணிவு படம் காரணமாக குறைவான எண்ணிக்கையில் திரையரங்குகளை பிடித்திருந்தாலும், குடும்பம் முக்கியம் என்று கருதும் ஏராளமான ரசிகர்களின் உள்ளங்களை நிறைவு செய்துள்ளது இந்தப் படம். ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்று வந்த வாரிசு உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில், ஆட்டநாயகன் ஆன் டூட்டி…மெகாபிளாக்பஸ்டர் வாரிசு…உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் படங்களின் வெளியீடு அதிகரித்து வரும் நிலையில், வாரிசு படத்தின் திரையரங்கு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், இன்னும் திரையரங்கை விட்டு வெளியேறவில்லை. திரையரங்கைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி வாரிசு படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் மட்டுமே ரூ.300 கோடி வசூல் குவித்தது. மெர்சல் ரூ.250 கோடி தோராயமாக, சர்கார் ரூ.250 கோடி தோராயமாக, மாஸ்டர் ரூ.220 கோடி தோராயமாக மற்றும் பீஸ்ட் ரூ.210 கோடி தோராயமாக வசூல் குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 67ஆவது படமான லியோ படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி சரஸ்வதி மற்றும் விஜயதசமி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
