
மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சுந்தீப் கிஷான் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மைக்கேல் சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் மூலமாக சிவ செர்ரி, பரத் சௌதரி, புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். மைக்கேல் படத்தில் வரலட்சுமி சரத்குமர், திவ்யன்ஷா கௌஷிக், வருண் சந்தீஷ், அனுசிய பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் 3ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் 3 நாட்களில் மட்டும் ரூ.9.7 கோடி வரையில் வசூல் குவித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், இந்தப் படம் வெளியானதைத் தொடர்ந்து படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி டுவிட்டரில் உணர்வுப்பூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

ரஞ்சித் ஜெயகொடி கூறியதாவது “ எனது எல்லா படைப்புகளை போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கு என் 100% உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும். மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி; மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். ஆகப்பெரும் வாஞ்சையுடன்-ரஞ்ஜித் ஜெயக்கொடி என்று அவர் தெரிவித்துள்ளார்.
