
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் நடிகை ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் 27 வயதான நடிகை ஷர்மீன் அகீ. இவர், டாக்கா, சின்சியர்லி யுவர்ஸ், பாண்டினி, பைஷே ஸ்ரபோன், டிரான்சிட் மற்றும் மிஸ்டர் அண்ட் மிசஸ் படுவேரி (டிவி ஷோ) ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது வங்கதேச சினிமாவில் முன்னணி நடிகைகளில் வலம் வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடந்து வருகிறது.

அப்போது ஷர்மீன் அகி இருந்த மேக்கப் அறையில் ஒரு பொருள் பொன்று வெடித்து திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த திடீர் விபத்தில், மேக்கப் அறையில் சிக்கியிருந்த ஷர்மீன் அகீயின் கை, கால் மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை மீட்ட படக்குழுவினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது தீக்காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிட்டத்தட்ட 35 சதவிகிதம் வரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர், ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஷ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அருகிறது. இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.