
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தனது 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, ராஜாவுக்கேத்த ராணி, பிரியா, தாயில்லாமல் நான் இல்லை, சந்திப்பு, நான் அடிமை இல்லை, மகுடம், புலி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீதேவி தனது 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பிலிம்பேர் விருதுகள், மாநில அரசு விருதுகள், பத்மஸ்ரீ விருது, தேசிய திரைப்பட விருது என்று பல விருதுகளை வென்றுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கூட சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இறுதியாக இங்கிலீஷ் விங்கிலிஷ், மாம் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவர இருக்கிறது. ஸ்ரீ தேவி தி லைஃப் ஆஃப் ஏ லெஜண்ட் என்ற பெயரில் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளிவர இருக்கிறது. இந்தப் புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார்.

இது குறித்து தீரஜ் கூறுகையில், வெஸ்ட்லாண்ட் புக்ஸ் என்ற அறிமுக புத்தகத்தை புதுப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது அளித்துள்ள ஆதவிரற்கும் அன்பிற்கும் நன்றி என்றார். இது குறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது: தீரஜ் குமார் குடும்பத்தில் ஒருவர். ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். அவர், ஸ்ரீதேவியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார். இந்தப் புத்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.