
10,000க்கும் அதிகமான பாடல்கள் பாடிய வாணி ஜெயராம் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். கடந்த 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வேலூரில் பிறந்துள்ளார். கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட இவரது பெற்றோர் துரைசாமி ஐயங்கார் மற்றும் பத்மாவதி ஆவர். 1971 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அப்போது ஹிந்தியில் குட்டி என்ற படத்தில் போலே ரே பபிஹரா என்ற பாடலை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒடிசா, பெங்காளி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
சினிமாவில் மட்டுமின்றி நாட்டுப்புற பாடல்கள் பாடுவதிலும் வித்தகராக திகழ்ந்துள்ளார். அதோடு, பாப், கஜல், பஜனை பாடல்களையும் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் வாணி ஜெயராம் பாடியுள்ளார். இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக தீர்க்கசுமங்கலி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை பாடியுள்ளார். முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு என்ற பாடலை பாடியுள்ளார். இது தவிர, நானா பாடுவது நானா, நீ கேட்டால் நான் மாட்டேன் என்று, பொங்கும் கடலோசை, இரவும் பகலும், அழகிய விழிகளில், ஆலமரத்துக் கிளி, எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, பாரதி கண்ணம்மா, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது என்று ஏராளமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியிருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் தலையில் அடிபட்ட நிலையில் வீட்டிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி, வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் வீட்டில் மேஜை மீது விழுந்த நிலையில் தலையில் அடிபட்டு வாணி ஜெயராம் உயிரிழந்திருக்கிறார் என்றும், வீட்டிலுள்ள 2 அடி மேஜையில் ரத்தக் கறைகள் இருப்பதாகவும், சந்தேகப்படும்படி வீட்டிற்கு யாரும் வரவில்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
