
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார்.
இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். கடந்த 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வேலூரில் பிறந்துள்ளார். கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட இவரது பெற்றோர் துரைசாமி ஐயங்கார் மற்றும் பத்மாவதி ஆவர். 1971 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அப்போது ஹிந்தியில் குட்டி என்ற படத்தில் போலே ரே பபிஹரா என்ற பாடலை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒடிசா, பெங்காளி என்று பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
சினிமாவில் மட்டுமின்றி நாட்டுப்புற பாடல்கள் பாடுவதிலும் வித்தகராக திகழ்ந்துள்ளார். அதோடு, பாப், கஜல், பஜனை பாடல்களையும் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் வாணி ஜெயராம் பாடியுள்ளார். இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக தீர்க்கசுமங்கலி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை பாடியுள்ளார். முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு என்ற பாடலை பாடியுள்ளார். இது தவிர, நானா பாடுவது நானா, நீ கேட்டால் நான் மாட்டேன் என்று, பொங்கும் கடலோசை, இரவும் பகலும், அழகிய விழிகளில், ஆலமரத்துக் கிளி, எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, பாரதி கண்ணம்மா, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது என்று ஏராளமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியிருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் வீட்டிற்கு தினந்தோறும் பணிப்பெண் ஒருவர் வந்து அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்துவிட்டு செல்வார். அப்படி இன்று வரும் போது நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்ற போது தலையில் நெற்றிப்பகுதியில் அடிபட்ட நிலையில், மயங்கிக் கிடந்ந்தார். இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்து விட்டதாக கூறியதாக வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாணி ஜெயராம் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Legendary singer #vanijayaram passed away 🙏 OM SHANTHI 🙏 pic.twitter.com/4YYJPf7ZvQ
— VIP Tamil Online (@viptamilonline) February 4, 2023