
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் முழங்காலுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு திரைக்கு வந்த முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வாரிசு நடிகர் அருண் விஜய். பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, கண்ணால் பேசவா, அன்புடன், பாண்டவர் பூமி, இயற்கை, ஜனனம், தவம், வேதா, மாஞ்சா வேலு என்று வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், படங்கள் தோல்வி அடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்தப் படம் அவருக்கு இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆக்ஷன் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். குற்றம் 23, சாஹோ, மாஃபியா: சேப்டர் 1, ஓ மை டாக், யானை, சினம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பார்டர் என்ற படத்தில் பாதுகாப்பு புலனாய்வு நிறுவன அதிகாரியாக அரவிந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருவதாக சொல்லப்படுகிறது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்துள்ளார். மேல்ம், பகவதி பெருமாள், ஸ்டெபி படேல், ஷான் ஷரிப் கான், சந்திரசேகர் கொனேரு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் அச்சம் என்பது இல்லையே என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இந்தப் படத்தில் அருண் விஜய் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக படப்பிடிப்பின் போது பல சமயங்களில் அவர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு சண்டைக் காட்சியின் போது தான் அருண் விஜய்க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்திற்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற கேரளா மாநிலம் திருச்சூர் சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காயம் குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது காயம் பட்ட முழங்காலுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சை பெற்று வருவதால் இப்பொழுது நன்றாக உணர்கிறேன். நான் 4ஆவது நாள் சிகிச்சையில் இருக்கிறேன். சிகிச்சை முடிந்து விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
